Saturday, May 06, 2006

GCT தோழனுக்கு ஒரு கடிதம் --- Part 3

முதல் மற்றும் இரண்டாம் பகுதிகளை படித்து விட்டுத் தொடரவும் !

தோழனுக்கு ஒரு கடிதம் --- பகுதி 3
****************************************


என் அன்புக்குரிய ப்ரீதம்,

கலை நிகழ்ச்சி மேடைகளில் ஏறியவுடன், ஏதோ ஒரு சக்தி உன்னை ஆட்கொண்டதை நான் உணர்ந்திருக்கிறேன். AD-APT என்று அழைக்கப்பட்ட ஒரு கலை நிகழ்ச்சி உனக்கு நினைவிருக்கிறதா ? அது, பொருட்களை வித்தியாசமாக, சுவைபட, ஒரிஜினல் விளம்பரங்களை நையாண்டி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டிய ஒரு போட்டியாகும். அதில் உன்னுடன் பங்கேற்ற நம் நண்பர்களை எண்ணிப் பார்க்கிறேன்.

நிகழ்ச்சியின் விளம்பரக் குரலாக இருந்த, சரீரத்திற்கும் சாரீரத்திற்கு சம்மந்தமே இல்லாமல் கணீரென்ற குரல் கொண்ட, கல்லூரியில் இருந்த பெண்களெல்லாம் தங்களது உடன்பிறவாச் சகோதரனாக பாவித்த, கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்தவனான 'நாரி' என்ற நாராயணன், "A short man with a high stature" என்ற கூற்றுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தான்!

'Badoo' என்கிற செல்வராஜ் தான் எவ்வளவு அழகாக சித்திரங்கள் வரைவான்! அவன் இருக்கும் இடத்தில் கலகலப்புக்கு குறைவிருக்காது.

'Vasco' என்கிற வசந்த்குமார், ஒரே சமயத்தில் GRE, TOEFL, GATE, CAT என்று பல தேர்வுகளையும் எதிர்கொண்டு அனைத்திலும் மிக அதிக மதிப்பெண்கள் பெற்று நம்மையெல்லாம் ஆச்சரியத்தில் ஆழ்த்தினான்!

GS என்றழைக்கப்பட்ட ஸ்ரீராம், எந்த திரைப்பட பாடலானாலும், கேள்வி ஞானத்திலேயே, அப்பாடலுக்கு அடிப்படையாக அமைந்த கர்னாடக ராகத்தை எளிதில் கண்டுபிடித்து விடுவான். அவன், விகடனின் 'மாணவர் பத்திரிகையாளராக' நம் கல்லூரியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவனும் கூட !

ஒரு குழுவாக, நீங்கள் AD-APT-இல் நடித்துக் கலக்கியதை நினைத்துப் பார்த்தால், இன்றும் சிரிப்பு வருகிறது. அந்நிகழ்ச்சியில் டார்ஸான் ஏதோ ஒரு டானிக்கை சாப்பிட்டதால் அவனுக்கு உண்டான உடல் வலிமைக்கு சான்றாக வரும், "When Tarzan farts, the whole jungle stinks" என்ற ஒரு வாசகத்தை கேட்டு அன்று கல்லூரி அரங்கமே அதிர்ந்தது !!!


மற்றொரு கலை நிகழ்ச்சியான MOCK PRESS-இல் (ஒரு பிரபலமான நபரைப் போல் ஒருவர் வேடமேற்று சீனியர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அடங்கிய ஒரு பத்திரிகையாளர் குழு கேட்கும் கேள்விகளுக்கு திறமையாக பதிலளிக்கும் நிகழ்ச்சி அது!) நீ ஒரு முறை கர்னல் கடா·பியாகவும், மற்றொரு முறை சாத்தானாகவும் வேடமேற்று பிரமிக்கத்தக்க வகையில் நடித்து, கேள்விகளை திறமையாக எதிர் கொண்டு அசத்தினாய். நீயும், நடிகர் சத்யராஜ் போலவே நெகடிவ் கேரக்டர்களில் பரிமளித்தவன்! சாத்தானாக நீ மேடையேறியவுடன், பார்வையாளர் மத்தியில் சாத்தானின் பக்தன் போல் நீ செட்டப் செய்திருந்த நண்பன் பாடலிநாதன் கூட்டத்திலிருந்து வெளிப்பட்டு, மேடையை நோக்கி விரைந்து உனக்கு சூடம் காட்டி, "ஓ சாத்தானே, எனக்கு அருள் பாலியுங்கள்!" என்று உன்னைப் பணிந்தது பயங்கர கலகலப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து நீ மேடையில் செய்த அட்டகாசங்கள் சொல்லி மாளாது!

பத்திரிகையாளர் குழுவில் இடம் பெற்ற வேதியியல் ஆசிரியரின் தலையில் நீ கை வைத்து, " Satan bless you!" என்று ஆசீர்வதித்து அவரை மிரள வைத்தாய். அது மட்டுமா, பார்வையாளர் மத்தியில் உட்கார்ந்திருந்த ஜுனியர் மாணவி வந்தனா (அழகும், திறமையும், பணமும் ஒரு சேர அமையப் பெற்றவரிடம் காணப்படும் ஒரு மெல்லிய அகந்தை அவளிடமும் இருந்தது. உனக்கும் கொஞ்சம் ஈகோ உண்டல்லவா? அதனால், you had a love-hate relationship with her) பக்கம் திரும்பி காமப்பார்வையுடன் (உன் நடிப்பைத் தான் சொல்கிறேன், கோபிக்காதே!), "Hi, beauty! What is your name ?" என்று வினவினாய்! பதில் சொல்ல எழுந்த வந்தனாவை, "You are ugly! I was asking the girl next to you!" என்று இடைமறித்து எரிச்சல் கொள்ள வைத்தாய்.

நிகழ்ச்சி முடிந்ததும், வந்தனா எங்களிடம், "He was a bit too much on stage, today!" என்று பொரிந்ததையும், அதற்கு வேதியியல் ஆசிரியர், "No, Preetham was actually three-much, today!" என்று நகைச்சுவையாகக் கூறியதையும், உன் நடிப்புக்குக் கிட்டிய பாராட்டாகவே நான் பார்க்கிறேன்!

நாம் மூன்றாமாண்டு பயில்கையில், இலங்கைப் பிரச்சினையை முன்னிறுத்தி தமிழ்நாட்டுக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். அதனால், நம் கல்லூரி நிர்வாகம் விடுதிகளிலிருந்து மாணவர்களை வெளியேற்றியது. சென்னைக்குச் செல்ல விரும்பாமல், நான், நீ, துரைராஜ், ராம்ஸ் என்கிற ராமச்சந்திரன் ஆகியோர், நண்பன் செல்வராஜுடன் குன்னூருக்கு மேல் அமைந்துள்ள பேலிதளா (Belidala) என்ற அவனது சொந்த கிராமத்துக்கு பயணப்பட்டது உனக்கு நிச்சயம் ஞாபகம் இருக்கும்.

அப்போது நாம் மேற்கொண்ட வனப்பயணம் (நானும், ராம்ஸ¤ம் சேற்று மணலில் வழுக்கி, ஓர் ஐம்பதடி கீழிருந்த பாறைப் பரப்பில் விழ இருந்தோமே!), நாம் கலந்து கொண்ட செல்வராஜ் (படுகர் இன) இல்லத் திருமணம், நமக்கு அங்கு கிடைத்த உற்சாகமான மரிதையான வரவேற்பு, சைட் அடித்த செல்வாவின் அழகான மாமா/அத்தைப் பெண்கள் மற்றும் உள்ளூர் தயாரிப்பில் உற்சாக பானங்கள் என்று எல்லாம் சேர்ந்து அது வாழ்வில் நாம் மறக்க முடியாத ஒரு பயணம் ஆனது, இல்லையா !

பொறியியற் படிப்பு முடிந்து, நாம் இருவரும் பெங்களூரில் சிறிது காலம் ஒன்றாகச் சுற்றினோமே, அந்த நாட்களையும் என்னால் மறக்க இயலாது !

என்றென்றும் அன்புடன்
பாலா


--- மடல் இன்னும் விரியும்!

தேர்தல் 2006 - பிரச்சாரமும் வாக்குறுதிகளும்

1. தமிழ்நாட்டின் 2 பெரிய கட்சிகளும், இலவச கலர்டிவி / கணினி, 2 ரூபாய் / இலவச அரிசி, திருமணத்திற்கு 15000 ரூபாய் / 4 கிராம் தங்கம், விவசாயிகளுக்கு கடன் ரத்து, பல தரப்பினருக்கும் சலுகைகள், வேலை வாய்ப்பு, இலவசமாக விளைநிலம் ... என்று வரைமுறை இன்றி வாக்குறுதிகளை அள்ளி விட்டு, இன்னும் சில வருடங்களில் தமிழகத்தில் தேனும் பாலும் ஓடும் என்ற மாயையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், சில கேள்விகள் எழுகின்றன.

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் வந்தால், மக்கள் மிக்க மகிழ்ச்சி அடைவார்கள் தானே :) "இலவசத்திலேயே" வாழ்க்கையை ஒட்டி விடலாமே ???

ஆட்சிக்கு வரும் கட்சி, வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால், அக்கட்சியின் மேல் நடவடிக்கை எடுக்க தகுந்த வழிவகை செய்வது அவசியமில்லையா ? ஏதாவது வகையில் தண்டனை அவசியமாகிறது இல்லையா ?

வாக்கு கொடுத்து விட்டு, நிறைவேற்றாமல் இருப்பது மக்களை ஏமாற்றும் வேலையில்லையா ?

உச்சநீதி மன்றமும், தேர்தல் ஆணையமும், பாராளுமன்றமும் இதற்கு ஏன் முக்கியத்துவம் அளிக்க முன் வரவில்லை ? இது குறித்து ஆலோசனை செய்வது அவர்கள் கடமை இல்லையா ?

மொத்த பட்ஜெட்டையே தேர்தல் வாக்குறுதிகளாக்கி விடுவது அபத்தமில்லையா ?

இன்னும் எவ்வளவு நாட்கள் மக்களை இளிச்சவாயர்கள் என்று அரசியல்வாதிகள் நினைப்பார்கள் ?

பொதுவாக, மக்கள், கட்சிகள் அள்ளி வீசும் வாக்குறுதிகளை வைத்துத் தான் வாக்களிக்கிறார்களா ?


பதில் கூறுங்கள், நண்பர்களே !

2. மீடியா (அதாவது, சொந்தமாக டிவி, தினசரி) பலம் இல்லாத மற்ற கட்சிகள், தமிழகத்தின் 2 பெரிய கட்சிகள் செய்யும் பிரச்சாரத்திற்கு நடுவே காணாமல் போய் விடுகிறார்கள். அதனால் அவை, இந்த இரண்டு கட்சிகளில் ஏதாவது ஒன்றோடு கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றன. அதனாலோ என்னவோ, தமிழகத்தில் மூன்றாவது அணி என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விட்டது !!! தேர்தல் ஆணையம், டிவி வழி பிரச்சாரத்திற்கும் வழிமுறைகளை வகுக்க வேண்டும். ஜனநாயகத்தில், எல்லா கட்சிகளின் பிரச்சாரமும் மக்களை சரியாக சென்றடைவது அவசியமாகிறது இல்லையா ?

என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, April 15, 2006

GCT தோழனுக்கு ஒரு கடிதம் --- Part 2

முதல் பகுதியை படித்து விட்டுத் தொடரவும் !

தோழனுக்கு ஒரு கடிதம் ! - Part II
****************************************

என் அன்புக்குரிய ப்ரீதம்,

முதலாண்டில் நாம் பயின்ற நேரம், ரேகிங் அதிகமாகவே இருந்தது. கிண்டல், கேலி என்பவை போக, பல சமயங்களில் சீனியர் மாணவர்கள் அடி உதையும் நமக்கு வழங்கினர். மேலும், நமது அறைகளில் இரவு எட்டு மணிக்கு மேல் விளக்கெரிவதற்கு தடா போட்டிருந்தனர். தவறி விளக்கெறிந்தால், ஆர்ப்பாட்டமாக கல் வீசி ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து வந்தனர். அதற்கெல்லாம் அசராமல், நம் அறை ஜன்னலுக்கு இரு கெட்டியான போர்வைகளை பாதுகாப்பு அரணாக்கி, நடு இரவு வரை துணிச்சலாக விளக்கை எரிய விட்டு, நீ ஏதாவது படித்துக் கொண்டிருப்பாய். நம் அறையைத் தவிர்த்துப் பார்த்தால், விடுதியே இருளில் மூழ்கியிருக்கும். இதனால், கடுப்பான சீனியர்கள் தொடர்ந்து கல் வீசியதில், நம் அறையின் ஜன்னல் கண்ணாடியை மொத்தமாக இழந்தது! இரு வாரங்களில் கல் வீச்சும் ஒய்ந்து போனது! அதனால், எட்டு மணிக்கு மேல் படிக்க விரும்பிய 'காந்தி' வகை மாணவ நண்பர்கள், நம் அறையை நோக்கி விட்டில் பூச்சிகள் போல் படையெடுத்து நம் உறக்கத்தை கெடுத்தது தான் மிச்சம்!

அது போலவே, சீனியர்களின் அடி உதையை நீ எதிர் கொண்ட விதமும் அபாரமானது. நம் சக மாணவர்கள் சீனியர்களுக்கு அஞ்சி, 6 மணிக்கு மேல் விடுதியை விட்டு வெளியே வர மாட்டார்கள். நீயோ (நடுக்கத்தை வெளிக்காட்டி கொள்ளாத என்னையும் இழுத்துக் கொண்டு!) வேண்டுமென்றே கல்லூரி வளாகத்தில் அங்குமிங்கும் நடை பயில்வாய். அதனால், சீனியர் மாணவர்களின் பார்வையில் விழுந்து, நமக்கு பல தடவை அடி உதை கிடைத்தது. ஆனால், நீ நினைத்தது போலவே, ஒரு கட்டத்தில், அவர்களுக்கே அது அலுத்துப்போய், நம்மை பிடித்துப்போய், சீக்கிரமே சீனியர்களில் பலர் நமக்கு காட்·பாதர்களாகி விட்டனர். இதனால் நம் காட்டில் நல்ல மழை!

சீனியர் மாணவர்களிடமிருந்து பழைய பாடப் புத்தகங்கள் நமக்கு கிடைத்தன. அவ்வப்போது ஹோட்டலில் ஓசிச் சாப்பாடு, திரைப்பட இரவுக்காட்சிகளுக்கு விசேஷ அழைப்புகள், சீனியர் விடுதிகளுக்கு தங்கு தடையின்றி சென்று வர அனுமதி, சீனியர் மாணவிகளுடன் கடலை என்று பல அனுகூலங்கள் வாய்க்கப் பெற்றன. ஒரு முறை, ராகம் (தானம், பல்லவி!) திரையரங்கில் 'முந்தானை முடிச்சு' பார்த்து விட்டு, சீனியர்கள் சிலரோடு நாம் ஜட்கா வண்டியில் விடுதிக்கு திரும்பியது உனக்கும் மறந்திருக்காது என்று எண்ணுகிறேன்!

நீ சற்று வசதியான குடும்பத்தில் பிறந்தவன். மாதத்தின் முதல் தேதிகளில் உன் வீட்டிலிருந்து செலவுக்கு மணியார்டரில் பணம் வந்தவுடன் நீ குபேரனாக உருவெடுப்பாய். நண்பர்கள் எங்களுக்கும் குஷி தான்! பாரி வள்ளலைப் போல் எங்களை அரவணைத்து, சினிமா, ஹோட்டல் என்று வற்புறுத்தி கூட்டிச் சென்று செலவு செய்வாயே! அதனால், மாதத்தின் கடைசி பத்து நாட்களில், டீ/பன் வாங்கக் கூட கையில் காசில்லாமல் குசேலன் போல் காட்சி அளிப்பாய். உன் முகராசியோ என்னவோ, யாராவது ஒருவர் கிருஷ்ணனாக மாறி, அந்த சமயங்களில் உன் தேவைகளை பூர்த்தி செய்வதை நான் பல முறை பார்த்திருக்கிறேன். ப்ரீதம் என்று பெயர் கொண்டதாலோ என்னவோ, கல்லூரியில் பலருக்கும் நீ பிரியமானவனாகத் திகழ்ந்தாய்!

உன்னுடனும், ஷியாமுடனும் பலமுறை சென்றுண்ட ஆர்.எஸ்.புரம் அன்னப்பூர்ணா உணவகமும்,
நாம் தேர்வு சயமங்களில் விஜயம் செய்த, வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்த "அக்ரி" வினாயகர் கோயிலும்,
நாம் ஆங்கிலத் திரைப்படங்கள் கண்டு களித்த சென்ட்ரல் திரையரங்கமும்,
மாலை நேரங்களில் உற்சாகமாக அரட்டை அடித்தபடி, நாம் தேங்காய் பன்னும் தேநீரும் சாப்பிட்ட, தடாகம் சாலைச் சந்திப்பில் அமைந்த டீக்கடையும்
என் ஞாபகத்தில் நினைவுச் சின்னங்கள் போல் குடியேறி விட்டன ! அதே போல், அன்னப்பூர்ணா உணவகத்து basement-இல் இருந்த 'சுகப்ரியா' Bar-யையும் நீ மறந்திருக்க மாட்டாய் தானே ;-)

சென்ட்ரல் திரையரங்கில், "History of the World - I" பார்த்து ரசித்ததும்,
ஸ்ரீவள்ளி டாக்கீஸில் தரையில் அமர்ந்து "கொக்கரக்கோ" படம் பார்த்ததும்,
வாடகை சைக்கிள் எடுத்துக் கொண்டு வேகு வேகென்று மிதித்து மருதமலை கோயில் சென்றதும்,
கொஞ்சமாக பீர் அருந்தி விட்டு நீயும் ஷியாமும் 'கோயில் யானை' சந்திரசேகரையும், 'பத்து' என்னும் பத்மநாபனையும் கலாய்த்ததும்,
எனக்கு சாருவிடம் ஒருவித ஈர்ப்பு இருப்பதாக (கொஞ்சம் இருந்தது!) எனக்குத் தெரியாமல் அவளிடம் சொன்னதில் அவள் என்னைப் பார்க்கும்போதெல்லாம் விநோதமாக நடந்து கொண்டதும்,
ஷியாமுடன் கட்டிய ஒரு பந்தயத்திற்காக, அறிமுகமில்லாத மிக அழகான முதலாண்டு மாணவி (பேர் நினைவிலில்லை!) ஒருத்தியிடம் சென்று, " I love you ! I will wait for your reply till tomorrow!" என்று அவளை அதிர்ச்சியில் உறைய விட்டு விடுவிடுவென்று திரும்பி வந்ததும்,
LP மேடம் வகுப்புகளில் attendance எடுக்கும்போதெல்லாம், "யெஸ், மதாம்!" (பிரெஞ்சில் மேடம் என்பதை 'மதாம்' என்பார்கள்) என்று வெறுப்பேற்றியதும்
மறக்கக்கூடிய விஷயங்களா, நண்பா !

உன் கூடப் பிறந்தவர் யாரும் இல்லாததால், தேர்வுக்கு முன் வரும் 'படிப்பு விடுமுறையில்' முக்கால்வாசி நேரத்தை சென்னையில் என் வீட்டிலேயே கழிப்பாய். என் அம்மா, பாட்டி, தம்பி, தமக்கை ஆகிய அனைவருக்கும் உன் மேல் மிகுந்த அன்பு உண்டு. அதுவும் என் தம்பிக்கு அக்காலத்தில் நீ ஆதர்ச நாயகனாக திகழ்ந்தாய்! என் குடும்பத்தோடு ஒன்றாக அமர்ந்து உண்ணும் (உன் வீட்டில் கிடைக்காத) வாய்ப்பிற்காக, எங்கள் வீட்டின் எளிமையான உணவைக் கூட மிகுந்த மகிழ்ச்சியோடு நீ ரசித்து உண்டதை இன்று எண்ணிப் பார்க்கையில், கண்ணில் நீர் திரையிடுகிறது, நண்பா!

கல்லூரி கலை நிகழ்ச்சி மேடைகளில் நீ பண்ணிய கலாட்டக்களை நமது கல்லூரித் தோழர்கள் இன்றும் மறக்கவில்லை!

என்றென்றும் அன்புடன்
பாலா


--- மடல் இன்னும் விரியும்!

Friday, April 14, 2006

சரத் - தவமாய் தவமிருந்து

*********************
*********************
*********************
*********************
*********************
தீபாரமணி என்ற அந்த தாயின் முதல் விமானப் பயணம் மிக்க பெருமை வாய்ந்ததாக அமைந்ததன் காரணம், அவரது தனயனின் அயராத உழைப்பும், சிறந்த கல்வியார்வமும் என்றால் அது மிகையாகாது ! இந்திய மேலாண்மை கழகம், அகமதாபாதில் (IIM-A) படித்துப் பட்டம் பெற்ற சரத்பாபு என்ற அவரது மகனின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் மேற்கொண்ட பயணம் அல்லவா அது !

மடிப்பாக்கத்தின் அருகில் ஒரு குப்பத்தில் , மிகச்சிறிய ஒரு கூரை வீட்டில், மிகுந்த சிரமங்களுக்கிடையில் வளர்க்கப்பட்ட சரத், வாழ்வில் உயரத் துடிக்கும் பல ஏழை மாணவர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. சரத் பள்ளியில் பயின்ற காலகட்டத்தில், தீபாரமணி ஒரு பள்ளியில் மதிய உணவுத் திட்டத்தின் கீழ், தினம் 30 ரூபாய் கூலிக்கு சமையல் புரிபவராகவும், பின்னர் SSLC முடித்து ஆசிரியையாகவும் பணியாற்றியிருக்கிறார். சொற்ப வருமானத்தில் தனது நான்கு பிள்ளைகளை பராமரிக்க இயலாத சூழலில், வீட்டில் உணவுப் பண்டங்கள் தயாரித்தும், சரத் மூலம் அவற்றை தெருக்களில் விற்றும், அவர் வீட்டுச் செலவை ஈடு கட்ட வேண்டி இருந்தது.

சரத், கிங்க்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்தபோது, எப்போதும் படிப்பில் முதல் மாணவராகத் திகழ்ந்தது, அவரது தாயாரின் கடும் உழைப்பையும், தன்னம்பிக்கையையும் வைத்துப் பார்க்கும்போது, அவ்வளவு ஆச்சரியமானதாகத் தோன்றவில்லை என்று கூறலாம் ! வீட்டில் மின்சாரம் இல்லை என்பதைக் கூட ஒரு பொருட்டாக நினைக்காமல், படிப்பை மட்டுமே தன் மூச்சாக எண்ணிய சரத்திற்கு ஊக்கமளித்த அவரது ஆசிரியர்கள், அவரது படிப்புக்கான செலவையும் ஏற்றனர்.

பின்னர் சரத், BITS, பிலானியில் பொறியியற் படிப்பு படித்தபோது, அணிவதற்கு நல்ல உடைகள் கூட அவரிடம் கிடையாது; அதை அவர் பொருட்படுத்தியதும் இல்லை ! அரசாங்க உதவி மற்றும் கடன் பெற்று பொறியியற் படிப்பை முடித்த சரத், Polaris நிறுவனத்தில் மூன்றாண்டு காலம் பணியாற்றினார். தனது கடன்களை அடைத்த பின்னர், CAT என்றழைக்கப்படும் IIM நுழைவுத் தேர்வுக்கு (இத்தேர்வு எவ்வளவு கடினமானது என்பது பெரும்பாலோர் அறிந்தது தான்!) தன்னை தயார்படுத்திக் கொள்ள கடுமையாக உழைத்தார். முதல் முறை மிக நன்றாக எழுதியும், தேர்வுக்கான கேள்விகள், தேர்வுக்கு முன்னரே வெளியான குளறுபடியால், சரத் தேர்ச்சி அடைய முடியாமல் போனது. மனம் தளராமல், இரண்டாம் முறை தேர்வெழுதி அபார மதிப்பெண்கள் பெற்றதால், இந்தியாவில் உள்ள ஆறு இந்திய மேலாண்மைக் கழகங்களிலிருந்தும் அவருக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு வந்தது !!!

மறுபடியும், படிப்புக்காக, கல்வி மானியத்திற்கு மேல் கடனும் வாங்க வேண்டியிருந்தது. இன்று, அகமதாபாதில் சரத் தொடங்கியுள்ள Food King Catering Services என்ற சிறிய நிறுவனத்தின் தொடக்க விழாவில், IIM-A யின் சேர்மனும், INFOSYS நிறுவனத்தின் தலைவருமான திரு.நாராயணமூர்த்தி பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சரத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் ! சரத் வாழ்வில் மென்மேலும் உயர நமது வாழ்த்துக்களைக் கூறுவோம்.

"என்ன தவம் செய்தீர்கள் அம்மா, இத்தகைய தவப்புதல்வனை ஈன்றெடுக்க!" என்று தான் அந்த உன்னதப் பெண்மணியை கேட்கத் தோன்றுகிறது !!!

என்றென்றும் அன்புடன்
பாலா
*********************
நன்றி: இந்து நாளேடு

Saturday, April 08, 2006

GCT கல்லூரி --- மலரும் நினைவுகள்

தோழனுக்கு ஒரு கடிதம் ! - Part I
*******************************************************
என் அன்புக்குரிய ப்ரீதம்,

உனது நட்பின் உன்னதத்தில் திளைத்த அந்த நாட்களை ஞாபகப்படுத்திப் பார்க்கையில், பறவைகள் ஒலி எழுப்பும் வனாந்திரத்தில், ஈரமான காலைப்பொழுது தரும் உளம் நிறை உற்சாத்தோடு, சிறு குழந்தையின் கரம் பிடித்து நடை பயிலும் உணர்வு எனக்கு !!

23 வருடங்களுக்கு முன்பு நடந்த நமது அந்த முதல் சந்திப்பு பளிச்சென்று நினைவில் நிற்கிறது. என் பெயர் இரண்டாவது தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றதால், நான் சற்று தாமதமாகத் தான் (வகுப்புகள் தொடங்கிய பின்) பொறியியற் கல்லூரியில் (GCT) சேர முடிந்தது. கல்லூரியில் சேர்வதற்கான ·பார்மாலிட்டிகளை முடித்து, எனக்கு ஒதுக்கப்பட்ட விடுதி அறைக்கு வந்து சேர மதியம் மேல் ஆகி விட்டது. விடுதியில் அவ்வளவாக ஆள் அரவமில்லை. சற்று நேரத்தில் முதலாண்டு மாணவர்கள் வகுப்புகள் முடிந்து வரத் தொடங்கினர். முதலில் வந்த சிலரிடம் நானே வலியச் சென்று என்னை அறிமுகப்படுத்தி கொண்டு அளவளாவிக் கொண்டிருந்தேன்.

சற்று நேரத்திற்கு பின், புயல் போல் அவ்விடத்திற்கு வந்த நீ, குட்டைச் சுவற்றின் மேல் ஏறி அமர்ந்து, பொதுவாக, "என்னப்பா, எதைப் பத்தி குரூப் டிஸ்கஷன் பண்ணிட்டு இருக்கீங்க ?" என்று வினவிய பின், கூட்டத்தில் புதியவனான என்னைப் பார்த்தவுடன் மலர்ச்சியோடு கையை நீட்டி, "Hi, I am Preetham from Madras, You must be from Madras, too !" என்று கூறி, நான் நீட்டிய கையைப் பற்றி குலுக்கினாய். அந்த இறுக்கமான கை குலுக்கலே, நம்மிடையே பின்னாளில் மலர்ந்த இறுக்கமான நட்புக்கு அச்சாரமாய் அமைந்தது !!!

பழகப் பழக நாம் நல்ல நண்பர்கள் ஆனோம். அப்போது ஓர் அறைக்கு இரு மாணவர்கள் என்றிருந்தனர். என்னை உன் (unofficial) ரூம்மேட் ஆக்கிக் கொள்வதற்காக, உன் ரூம்மேட் வாசுவை அறையிலிருந்து அப்புறப்படுத்த நீ எடுத்த பிரயத்தனங்களை சொல்லி மாளாது ! ஆரம்பத்திலிருந்தே உன்னைக் கண்டு சற்று மிரண்டிருந்த அவன், தன் பெட்டி படுக்கையை எடுத்துக் கொண்டு, அவனைப் போல் அமைதியாக இருந்த மாணவர்கள் தங்கியிருந்த அறையில் மூன்றாவது ஆளாக தஞ்சமடைந்தான். நான் உன் 'சக அறையர்' ஆனேன் (ஆக்கப்பட்டேன்!) !!! என் official ரூம்மேட் 'மொட்டைப்'பழனி தனிக்காட்டு ராஜா ஆனான் !!!

கல்லூரி வாழ்வின் பல சமயங்களில் வெளிப்பட்ட உன் பலவித திறமைகளைக் கண்டு வியக்காத நண்பர்களே இருக்க முடியாது. மொத்தத்தில் எங்களிடையே ஒரு சூப்பர் ஸ்டார் போல் நீ விளங்கினாய் !!! ஆங்கிலத்தில் நல்ல புலமை உனக்கிருந்தது. ஆங்கிலத்தில் சிறப்பாக கட்டுரைகள் எழுதுவாய், கவிதைகள் புனைவாய். ஆங்கிலப் பேச்சு போட்டிகளில் மடை திறந்தாற் போல் முழங்கி பல முறை பரிசுகள் வென்றிருக்கிறாய் !

படிப்பிலும் நீ கெட்டிக்காரன் தான். கேள்வி ஞானம் மிக்கவனாக நீ விளங்கியதில் எனக்கு ஆச்சரியம் ஏதுமில்லை ! எனக்கு நன்றாக நினைவிருக்கிறது! தேர்வு சமயங்களில், நானும் நீயும் ஒன்றாக படிப்போம். பல நேரங்களில் என்னை சத்தமாக படிக்கச் சொல்லி, மெத்தையில் கண் மூடி சயனித்தபடி நான் கூறுவதை உள்வாங்கிக் கொண்டு, சரியாக பன்னிரெண்டு அடித்தவுடன் குட்நைட் சொல்லி நீ உறங்கச் சென்று விடுவாய் !!! நானோ தொடர்ந்து காலை நான்கு மணி வரை படித்துக் கொண்டிருப்பேன். என் கடின உழைப்பின் பலனாக மொத்தத்தில் உன்னை விட மூன்று அல்லது நான்கு மதிப்பெண்கள் மட்டுமே அதிகம் பெற முடிந்தது கூட என் பாக்கியமே !!! நான் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் என்னை விட நீ தான் அதிகம் சந்தோஷப்பட்டிருக்கிறாய், நண்பா !!!

ஆங்கில இசை வீடியோக்களை பார்த்தே திறமையாக நடனம் ஆடக் கற்று, கல்லூரி கலை விழா ஒன்றில் அற்புதமாக நடனமாடி நீ பரிசு வென்றது என் நினைவில் பசுமையாக உள்ளது! விளையாட்டுகளிலும் நீ கலக்கியிருக்கிறாய், கிரிக்கெட் தவிர! ஹாக்கி, கால்பந்து, டேபிள் டென்னிஸ், கூடைப்பந்து, தடகளம், வாலிபால் என்று பல விளையாட்டு அணிகளிலும் இடம் பெற்று உன் திறமையை காட்டியிருக்கிறாய்.

ஆனால், கிரிக்கெட் அணி கேப்டன் 'மொட்டை' ஷியாமுடன் ஒரு தடவை மல்லுக்கு நின்று, அணியில் சேர்ந்து, துவக்க ஆட்டக்காரனாக களமிரங்கி, கண்மூடித்தனமாக மட்டையை வீசி, முதல் பந்திலேயே நடு ஸ்டம்பை இழந்து பரிதாபமாக நின்றது, ஏனோ என் நினைவுக்கு வந்து தொலைக்கிறது :) அதே போல, ஷியாம், ஒரு முறை, நம் கல்லூரி சார்பில் களமிரங்கி, உடுமலைப்பேட்டை கிரிக்கெட் கிளப்புக்காக அப்போது விளையாடிக் கொண்டிருந்த ராபின் சிங்கின் (அவர் வேகப்பந்து வீச்சாளராக அறிமுகமானவர்!) பௌலிங்கை அனாயசமாக எதிர்கொண்டு எடுத்த மின்னல் வேகச் சதத்தையும் என்னால் மறக்க முடியாது
!!!

நான் இன்று ஆங்கிலத்தில் ஓரளவு திறமையாக எழுதவும், பேசவும் செய்வதற்கு, நான் அன்று உன்னோடு பார்த்த பல ஆங்கில திரைப்படங்களும், நீ படிக்கத் தந்த புத்தகங்களும் காரணமாக அமைந்தன. உன்னிடமிருந்து, வாசிப்பனுபவம், அவைக்கஞ்சாமை, தியானம், தன்னம்பிக்கை, மனவுறுதி என்று பல நல்ல விஷயங்களை நான் கற்றுக் கொண்டேன். எனக்கு Richard Bach, Somerset Maughm, Kahlil Gibran, Aurobindo, Ayn Rand போன்றோரை அறிமுகப்படுத்தியவனும் நீயே !

ஆனால், உன்னுடன் சேர்ந்து வாழ்வதென்பது என்னைப் போன்ற ஒரு சாதாரணனுக்கு கடினமான ஒன்றாகவே ஆரம்பத்தில் இருந்தது. ஏனெனில், 'எதையும் ஒரு முறை' செய்து பார்ப்பதும், extremes-களில் நினைத்தபோது நிலை கொண்டு வாழ்வதும் உனக்கு மட்டுமே இயல்பானவை !!! ஒரு நான்கு மாதங்கள், வகுப்புகள், உடற்பயிற்சி, தியானம், கோயில்கள், படிப்பு, நேரத்துக்கு உறக்கம் என்று யாருடனும் அதிகம் உறவாடாமல் ஒரு யோகி போல் வாழ்வாய் ! திடீரென்று ஒரு நாள் அவையனைத்தையும் புறந்தள்ளி விட்டு, பாட்டு, கூத்து, நண்பர்களுடன் அரட்டை, இரவுக் காட்சிகள், உற்சாக பானங்கள், உச்சக்கடலை என்று உல்லாச வாழ்க்கைக்கு தாவி விடுவாய் ! அவ்வாறு உன் வாழ்க்கை முறையை நீ அடிக்கடி மாற்றுவது எனக்கு போகப்போக பழகி விட்டது. ஒரு சமயத்திலும், எதையும் என் மேல் நீ திணித்ததில்லை, எதற்கும் என்னை நீ வற்புறுத்தியதுமில்லை !!!

முதலாண்டில் நாம் பயில்கையில் அடிக்கடி நடந்தேறும் 'கல்லெறி வைபவம்' உனக்கு ஞாபகம் வருகிறதா ?

என்றென்றும் அன்புடன்
பாலா
*************************************************
--- மடல் இன்னும் விரியும் !

Sunday, March 12, 2006

படிச்சுட்டு முடிஞ்சா சிரிங்க --- 7-வது பதிவு

1. மேலாளர் vs பொறியாளர்

மேலாளர்கள் அடங்கிய ஒரு குழுவுக்கு ஒரு கொடிக்கம்பத்தின் உயரத்தை அளக்கும் பணி தரப்பட்டது. உடனே, அம்மேலாளர்கள் ஏணிகளையும், அளவு நாடாக்களையும் எடுத்துக் கொண்டு கொடிக்கம்பத்திற்கு விரைந்தனர்! அவர்கள் ஏணிகளில் ஏறி விழுவதும்,அளவு நாடாக்களை நழுவ விடுவதும் என்று அந்த இடத்தையே களேயபரம் செய்த வண்ணம் இருந்தனர் !

அப்போது அப்பக்கம் வந்த ஒரு இளம் பொறியாளர், அம்மேலாளர்கள் எதற்காக முயற்சிக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டு, அந்த கொடிக்கம்பத்தை நிலத்திலிருந்து பெயர்த்தெடுத்து, அதை படுத்த வாக்கில் நிலத்திலிட்டு அளவெடுத்து, அளவை மேலாளர் ஒருவரிடம் கூறினார்.

அவ்விடத்தை விட்டு அப்பொறியாளர் அகன்றவுடன், மேலாளர்களில் ஒருவர், இன்னொருவரைப் பார்த்து சிரித்தபடி கூறினார், "இப்படித் தான் பொறியாளர்கள் வேலை செய்கிறார்கள் ! நாம் உயரத்தை அளக்கக் கேட்டால், அவர்கள் நீளத்தை அளந்து தருவார்கள்" !!!!!

மேலே சொன்ன குட்டிக் கதையின் நீதி என்ன ???
***************************************************

2. வேறுபடும் கருத்துப் பரிமாற்றத் திறன் !

ஒரு ப்ராஜெக்ட் குறித்து மென்பொருளாளர் தன் ப்ராஜெக்ட் லீடரிடம்:

இந்த ப்ராஜெக்டை நம்மால் செய்யவே இயலாது ! தற்போதுள்ள டிசைனில் பெரிய மாற்றம் செய்ய வேண்டுவதோடு, இந்த பழமையான சிஸ்டம் குறித்த அறிவு நம் அணியில் ஒருவருக்கும் கிடையாது ! மேலும், அந்த சிஸ்டம் எழுதப்பட்ட கணினி மொழியில் நம்மில் யாருக்கும் பயிற்சி கிடையாது. இது போன்ற ப்ராஜெக்டை நம் நிறுவனம் ஏற்கவே கூடாது என்பதே என் கருத்து !

ப்ராஜெக்ட் லீடர் தன் மேலாளரிடம்:

இந்த ப்ராஜெக்டில் ஒரு டிசைன் மாற்றம் தேவைப்படுகிறது. இம்மாதிரி வேலைகளில் நம் அணியினர் எவருக்கும் அனுபவம் இல்லை. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள கணினி மொழி குறித்து அணியினருக்கு பயிற்சி தருவது அவசியமாகிறது! இந்த ப்ராஜெக்டை மேற்கொள்ள நாம் தற்போது தயாராக இல்லை என்பதே என் கருத்து !

மேலாளர் முதல் நிலை மேலாளரிடம்:

இந்த ப்ராஜெக்டில் ஒரு டிசைன் மாற்றம் தேவைப்படுவதோடு, இம்மாதிரி வேலைகளில் நமக்கு அனுபவம் குறைவு! நம் நிறுவனத்தில் இந்த ப்ராஜெக்ட் வேலையை எடுத்துச் செய்ய வல்ல, சரியாக பயிற்றுவிக்கப்பட்ட ஆட்கள் அதிகம் இல்லை! இந்த ப்ராஜெக்டை நம்மால் செய்ய இயலும், ஆனால் கால அவகாசம் சற்று அதிகம் தேவைப்படும் என்பதே என் கருத்து !!!

முதல் நிலை மேலாளர் சீனியர் மேலாளரிடம்:

இந்த ப்ராஜெக்ட் வேலை ஒரு டிசைன் மறுவடிவமைப்பு குறித்தது! இம்மாதிரி வேலைகளைச் செய்ய நம் நிறுவனத்தில் சிலர் உள்ளனர், இன்னும் சிலருக்கு, இதற்குத் தேவையான கணினி மொழி குறித்த அனுபவம் உள்ளது. இவர்கள், பிறருக்கு பயிற்சி அளிக்க முடியும்! இந்த ப்ராஜெக்டை நாம் அவசியம் மேற்கொள்ள வேண்டும், சற்று எச்சரிக்கையோடு, என்பதே என் கருத்து!

சீனியர் மேலாளர் நிறுவன முதல்வரிடம்:

இந்த ப்ராஜெக்ட், இது போன்ற டிசைன் மறுவடிவமைப்பில் ஏற்படும் தொழில் நுட்ப சவால்களை எதிர்கொள்ள வல்ல, நமது நிறுவனத்தின் திறனை, நமது போட்டியாளர்களுக்கும், பிறருக்கும் பறைசாற்றும்! இதற்கு வேண்டிய திறன்களும், இதை வெற்றிகரமாக செயல்படுத்தக் கூடிய ஆட்களும் நம்மிடம் உள்ளனர்! நம்மில் அனுபவமிக்க சிலர், இந்த ப்ராஜெக்ட் வேலைக்குத் தேவையான பயிற்சியை, இன்னும் பலருக்கு, ஏற்கனவே அளித்து விட்டனர்! எனவே, இம்மாதிரி ப்ராஜெக்ட் நம் கையை விட்டு நழுவ நாம் கண்டிப்பாக விடக் கூடாது என்பதே என் கருத்து !!!!!


நிறுவன முதல்வர் வாடிக்கையாளரிடம்:

எங்கள் நிறுவனம், இது போன்ற ப்ராஜெக்ட்களை பல பெரிய வாடிக்கையாளர்களுக்கு பல முறை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறது! இம்மாதிரி சவாலான வேலைக்கு எங்கள் நிறுவனத்தை நீங்கள் தேர்ந்தெடுப்பது மிகச் சரியான முடிவாக இருக்கும் என்று என்னால் உறுதியாகக் கூற முடியும்! இந்த ப்ராஜெக்டை, நீங்கள் கேட்கும் காலக்கெடுவுக்குள் நாங்கள் இந்த ப்ராஜெக்டை வெற்றிகரமாக செய்து முடிப்போம் என்பதே என் கருத்து !!!!!


என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, March 11, 2006

பல்லவியும் சரணமும் II - பதிவு 5

சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், (முடிந்தால் திரைப்படத்தையும்) கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

ஓருவர் பின்னூட்டமிடும்போது, 3 அல்லது 4 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு எல்லாவற்றுக்கும் விடை தெரிந்திருந்தாலும் கூட :-))

ஏனெனில், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே!

4 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!


1. வானத்தில் ஏறி சந்திர மண்டல வாசலைத் தொடலாமா ...

2 அருந்தச் சொல்வது மாங்கனிச் சாறு, கூடச்சொல்வது காவிரியாறு....

3. காலம் மாறினால் காதலும் மாறுமோ, மாறாது, மாறாது ...

4. மங்கல மேடையில் பொன்வண்ணம் கண்டாள் ...

5. அன்னம் போல நடை நடந்து வந்து என்னருகமர்ந்து நாணத்தோடு ...

6. பச்சைக்கல் வைத்த மாணிக்க மாலை பக்கம் நின்றாடுதோ ...

7. இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா ...

8. சின்னக்குடை போல் விரியும் இமையும் விழியும் பார்த்தால் ஆசை...

9. காதல் நெருப்பினிலே எனது கண்களை விட்டு விட்டேன் ...

10. தன்னந்தனியே எரியும் நெருப்பில் விடுவேனா ...

11. சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா...

12. அருகில் வந்ததும் உருகி நின்றதும் உறவு தந்ததும் ...


என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!


என்றென்றும் அன்புடன்
பாலா
*************************************

Sunday, January 29, 2006

ஓர் அவசரச் செய்தி -- பாகிஸ்தான் 65 / 6 !!

இன்று தொடங்கிய இந்தியா-பாகிஸ்தான் 3-வது டெஸ்ட் போட்டியில், இர்·பான் பதான் தனது முதல் ஓவரின் கடைசி 3 பந்துகளில் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தி (HATRICK) சாதனை படைத்துள்ளார் !!!! வீழ்ந்த மூவரில், யூனுஸ் கானும், யூசுபும் தொடர்ந்து இந்தியாவுக்கு (முதல் 2 டெஸ்ட்களில்) தொல்லை கொடுத்து வருபவர்கள்.

சல்மான் பட் டிராவிட்டிற்கு காட்ச் வழங்கியும், யூனுஸ் LBW ஆகியும், மொஹமட் யூசுப் Clean Bowled ஆகியும் (மூவரும் ரன் எடுக்காமலேயே) விக்கெட்டுக்களை இழந்தனர் !!!

அடுத்து, சகீர் கான் தன் பங்குக்கு 2 விக்கெட்டுக்களை (பைசல் இக்பால் மற்றும் அபாயகரமான ஷாஹித் அப்ரிடி ஆகியோரை) வீழ்த்தினார். அப்ரிடி, கண்ணை மூடிக் கொண்டு அடிக்கப் போய் Clean Bowled ஆனது பார்க்க அம்சமாய் இருந்தது !!!

இறுதியாக, தொடக்க ஆட்டக்காரராக வந்து சற்று தாக்கு பிடித்து வந்த இம்ரான் ·பரட், இளம் பந்து வீச்சாளர் RP சிங் பந்து வீச்சுக்கு விக்கெட்டை இழந்தார்.

இந்தியா டாஸில் வென்றது நல்லதாகப் போயிற்று !!! கராச்சியின் Green Top ஆடுகளம், பாகிஸ்தானுக்கு (ஒரு மணி நேரத்திலேயே!) பலிபீடமாகிப் போனது !! எப்படியோ இந்தியா வெற்றி பெற்றால் சரி தான் !!!!

என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, January 28, 2006

பல்லவியும் சரணமும் II - பதிவு 4

சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், (முடிந்தால் திரைப்படத்தையும்) கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

ஓருவர் பின்னூட்டமிடும்போது, 3 அல்லது 4 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு எல்லாவற்றுக்கும் விடை தெரிந்திருந்தாலும் கூட :-))

ஏனெனில், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே!

3 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!


1. கருவூரில் குடி புகுந்தேன் மண்ணூரில் விழுந்து விட்டேன் ...

2 முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி....

3. விளக்கை குடத்தில் வைத்தால் வெளிச்சம் தோன்றுமா ...

4. பண்பாடு இல்லாமல் பெண்பாடு பெரும்பாடு இப்போது ...

5. குங்குமம் வைத்தவன் சங்கமம் ஆவது இருவரின் நெஞ்சினிலே ...

6. எனது தெய்வம் வேறெங்கும் இல்லை ...

7. திருமணத்துக்கு முன் மனதை மூடும் .... மோகம் ...

8. இருப்பது சில நாள் அனுபவிப்போமே எது தான் குறைந்து விடும்...

9. அன்னையைப் பார்த்த பின் என்ன வேண்டும் ...

10. நூறு சொந்தம் வந்த பின்னும் தேடுகின்ற அமைதி எங்கே ...

11. முள் நடுவே மலர் வளர்த்து முடியும் வரை காத்திருந்தேன்...

12. என் தணலும் நீர் போல் குளிரும் ...


என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!


என்றென்றும் அன்புடன்
பாலா

Tuesday, January 24, 2006

Star6. மன்னனின் கௌரவம் சதுரங்க நடுவிலே! ((மீள்பதிவு)

அந்திமழையில் பதிப்பிக்கப்பட்டது

**************************************************

திருவல்லிக்கேணியில் உள்ள பெரிய தெருவில் இருக்கும் இந்து உயர்நிலைப் பள்ளி கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் பழமையானது. பள்ளிக் கட்டடம், அதே செம்மண் கலர் பெயிண்டு அடிக்கப்பட்ட தோற்றத்தோடு இன்றும் மாறாமல் காட்சியளிக்கிறது! நான் படித்த காலகட்டத்தில், அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சிலர் சேர்ந்து 'சாரதி செஸ் கிளப்' என்ற அமைப்பை நடத்தி வந்தனர். ஒருவர் அக்கிளப்பில் உறுப்பினராக ஆவது சற்று கடினமே! கிளப்பின் மூத்த உறுப்பினர்கள், சேர விரும்புபவரின் செஸ் அறிவை சோதித்துப் பார்த்து திருப்தி அடைந்தால் மட்டுமே அவர் உறுப்பினராக முடியும். சாரதி செஸ் கிளப் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை போட்டி நடத்தி, வெற்றி பெற்றவருக்கு பரிசுகளும் வழங்கி வந்தது. அந்த கிளப்பில் உறுப்பினர் ஆனதில் அப்போது எனக்கு ரொம்பப் பெருமை.

சாரதி செஸ் கிளப்பில் ஜாம்பவான்களாகக் கருதப்பட்டவர்கள், அதன் தலைவரான, 'சார்' என்றழைக்கப்பட்ட, எம்.காம். படிப்பில் தங்க மெடல் வாங்கிய ராகவன், கிண்டி பொறியியற் கல்லூரியில் படித்து வந்த வேணு (அதிபுத்திசாலி, ஆனால் கொஞ்சம் கர்வி), சென்னைப் பல்கலைக்கழக சேம்பியன் ரமணி மற்றும் சதுரங்க விளையாட்டை உயிர் மூச்சாகவும், பா·பி ·விஷரை ஆதர்ச நாயகனாகவும் பாவித்து வந்த 'செஸ்'வரதராஜன் ஆகியோர். தினமும் மாலை நேரங்களில் சார் வீட்டுத் திண்ணையில் செஸ் ஆட்டங்கள் நடைபெறும். எல்லாமே செஸ் விதிகளுக்கு உட்பட்டு நடைபெற்ற சீரியஸான ஆட்டங்கள். அதோடு உலகின் சிறந்த ஆட்டக்காரர்களின் ஆட்டங்கள் பற்றிய விவாதங்களும் உண்டு. அப்போது தான், என் வாழ்வில் மறக்க முடியாத அந்த சம்பவம் நடைபெற்றது!

அந்த கார்கால மாலைப் பொழுதில் வானம் இருண்டு, மிக லேசான தூறலுடன் மெல்லிய காற்று வீசிக் கொண்டிருந்தது. வழக்கம் போல நாங்கள் செஸ் விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது வீதியில் குப்பை பொறுக்கும் ஒரு தாடிக்கார இளைஞர், தோளில் கோணியோடு, வாசலில் நின்றபடி சன்னல் கம்பி வழியாக நாங்கள் ஆடுவதை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

சார் அவரைப் பார்த்து, "செஸ் ரொம்பப் பிடிக்குமா? விளையாடத் தெரியுமா?" என ஒரு பேச்சுக்கு கேட்டார். அவ்விளைஞர், " சுமார ஆடுவேங்க! என்னையும் சேத்துப்பீங்களா?" என்று பணிவாகக் கேட்டார். சார் என்ன நினைத்தாரோ, அவ்விளைஞரைப் பார்த்து, "கோணியை ஒரமாக வச்சுட்டு வாங்க. இவரோடு ஒரு ஆட்டம் ஆடலாம்" என்று வேணுவை சுட்டிக் காட்டி கூறினார். வேணு, "சார், நான் ஆடத்தான் வேண்டுமா?" என்று அயற்சியாக வினவ, சார், "பாவம், ஆசைப்படறார். ஒரு வாய்ப்பு தரலாமே" என்று குழுவின் தலைவர் என்ற முறையில் தனது முடிவைச் சொன்னவுடன் ஆட்டம் தொடங்கியது.

வேணு எங்களிடம் செய்வது போலவே, தனக்கு வெள்ளைக் காய்கள் என்று தானே நிர்ணயித்துக் கொண்டு, காய்களை செஸ் போர்டில் வரிசைப்படுத்தினார். இந்த மட்டும் ஆட வாய்ப்பு தந்தார்களே என்று
தாடிக்காரரும், அதற்கு ஆட்சேபிக்காமல், கறுப்புக் காய்களைஏற்றுக் கொண்டார்! வேணுவின் முதல் நகர்த்தல் P-K4. தாடியும் P-K4! அடுத்து, வேணுவின் P-KB4 என்ற மூவ், 'King's Gambit'க்கு தாடிக்காரருக்கு அழைப்பு விடுத்தது. வேணு, 'King's Gambit'-ஐ தொடர்ந்து ஆட்டம் செல்லக் கூடிய பலவித சாத்தியங்களிலும் விற்பன்னன் என்பதால், தாடி அந்த 'அழைப்பை' ஏற்பாரா, நிராகரிப்பாரா என்று எங்களிடையே ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது.

தாடி, PK4 X PKB5 என்று வேணுவின் சிப்பாயை வெட்டி வீழ்த்தி 'King's Gambit'க்கான அழைப்பை ஏற்றவுடன், 'தாடி கோணிக்குள் ஏதாவது செஸ் புத்தகம் வைத்திருக்கிறதோ' என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது! முதலில் கேஷ¤வலாகவும், வேகமாகவும் ஆட ஆரம்பித்த வேணு பத்து நகர்த்தல்களுக்கு பிறகு, எதிராளியின் சரியான பதில் மூவ்களைக் கண்டவுடன், யோசித்து ஆட ஆரம்பித்தார். வேணுவும் தாடியும் எதிர்மறையாக 'castle' செய்தவுடன், செஸ் ஆட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. தூறல் வலுத்து, இடியுடன் மழை பெய்யத் தொடங்கியது. வேணு ஒரு யானையையும், ஒரு விதூஷகரையும், ஒரு சிப்பாயையும் இழந்து தாடியின் ராணியை வீழ்த்தியிருந்தார். தாடி அசரவில்லை!

இருவருமே அடுத்தவரின் பாதுகாப்பு அரணை உடைக்கத் தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருந்தனர். ஒரு மணி நேரத்திற்கு பிறகு வேணுவுக்கு வியர்க்க ஆரம்பித்தது. இரண்டு கைகளாலும் தலையைப் பிடித்துக் கொண்டு செஸ் போர்டையே உற்றுப் பார்த்தபடி இருந்தார். குப்பை இளைஞரின் முகத்திலோ எந்தவொரு ரியாக்ஷனும் இல்லை. இந்த வினோதமான விளையாட்டைக் காண கூட்டம் வரத் தொடங்கியது. ஒரு கட்டத்தில், வேணுவிடம் ராணி, ஒரு விதூஷகர், ஒரு குதிரை மற்றும் மூன்று சிப்பாய்களும், தாடியிடம், இரண்டு யானைகளும், இரண்டு குதிரைகளும், நான்கு சிப்பாய்களும் இருந்தன.

வேணு திடீரென்று, "யாரும் ஜெயிக்க முடியாது போலிருக்கு! டிரான்னு வச்சிக்கலாம்" என்றதற்கு அவ்விளைஞர், "இல்லீங்க, இன்னும் ஆட்டம் பாக்கி இருக்குதுங்க" என்றார். பயங்கரக் கடுப்பான வேணு, ஆட்டக்களத்தில், ஆக்ரோஷமான தாக்குதலைத் தொடங்கினார். அப்போது வானம் மடை திறந்தது போல, பேரிரைச்சலுடன் மழை பெய்து கொண்டிருந்தது. வேணுவின் தாக்குதலை திறமையாக சமாளித்த தாடி இளைஞர், தன் ராஜாவை பத்திரப்படுத்தி விட்டு, வேணுவிடமிருந்து மேலும் இரண்டு சிப்பாய்களை வீழ்த்தி விட்டார்.

ஒரு தேர்ந்த 'முடிவாட்ட' (END GAME) விற்பன்னரின் லாவகத்துடன் காய்களை நகர்த்தி, தாடிக்காரர் வேணுவின் ராஜாவை சந்திக்கு இழுத்தார். 'தொடர் செக்' (Perpetual Check) வழியிலாவது தப்பித்து டிரா செய்து விடலாம் என்ற நம்பிக்கையால் (தாடிக்கு எதிராக 'ரிஸைன்' செய்வதை வேணு அவமானமாக எண்ணியிருக்கலாம் என்பது என் யூகம்!) ,வேணு தொடர்ந்து ஆடிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில், தாடிக்காரர் வேணுவை நோக்கி, "செக் மேட்! ஆனால் நீங்க ரொம்ப நல்லா ஆடறீங்கய்யா. நன்றிங்க." என்று கூறி விட்டு தன் கோணிப்பையை எடுத்துக் கொண்டு திரும்பிப் பார்க்காமல், விடுவிடுவென்று நடந்து சென்று விட்டார். சரியாக மழையும் நின்று, தெருவில் மழை நீர் வெள்ளமாகத் திரண்டிருந்தது. அவ்விடத்தில் ஒரு அபரிமிதமான அமைதியும் நிலவியது!

நடந்த சம்பவத்தின் அபாரத் தன்மையையும், அசாதாரணத்தையும் உணர அங்கு கூடியிருந்த எல்லோருக்கும் சற்று நேரம் பிடித்தது. நான் தாடிக்காரர் சென்ற வழியில் ஓடி, அவரை இடைமறித்து, "ஒங்க பேர் என்னன்னு சொல்லலியே?" என்று வினவியதற்கு, அவர், "அரசன்னு தெரிஞ்சவங்க கூப்பிடுவாங்க, தம்பி" என்று சொல்லி விட்டு போய் விட்டார். அன்றிலிருந்து செஸ் விளையாட வேணு வரவில்லை! வேணுவின் மெல்லிய அகந்தையை, அந்த தாடிக்கார அறிவாளி பொட்டலம் கட்டி தன் கோணியில் எடுத்துச்
சென்றதாகவே எனக்குத் தோன்றியது.

மெல்ல மெல்ல திண்ணை செஸ் ஆட்டங்களும் குறைந்து ஒரு கட்டத்தில் நின்று போயின. சார், மேற்படிப்புக்கு அமெரிக்கா சென்றவர் அங்கேயே செட்டில் ஆகி விட்டதாகக் கேள்வி. வேணு பொறியியல் படிப்பு முடிந்து, IIM, பெங்களூரில் மேலாண்மை படிப்புக்குப் பிறகு, பணி நிமித்தம் மும்பை சென்று விட்டார். அதன் பின் தொடர்பு இல்லை. திருவல்லிக்கேணி வீட்டை காலி செய்து போன ரமணி, தேசிய அளவில் செஸ் விளையாடியதாக, பின்னாளில் அவர் நண்பர் மூலம் கேள்விப்பட்டேன். எனக்கும் செஸ்ஸ¤க்கும் ஆன தொடர்பு, ஆங்கில தினசரிகளில் இடம்பெறும் செஸ் புதிர்களை ஆராய்வதோடு நின்று போனது!
*******************************************

நாலைந்து வருடங்களுக்கு முன், மும்பையில் எனக்குப் பழக்கமான நண்பர் ஒருவர் அழைப்பை ஏற்று, அவரை சந்திக்க மதுரைக்குச் சற்று தொலைவில் அமைந்துள்ள விஸ்வநாதபெரி என்ற கிராமத்துக்கு, சில நண்பர்களுடன் சென்றிருந்தேன். நண்பரின் தந்தையார் பண்னையார் என்பதும், அவருக்கு கிட்டத்தட்ட 200 ஏக்கர் விளைநிலம் இருப்பதும், அங்கு சென்ற பிறகே எங்களுக்கு தெரிய வந்தது. பெரிய பண்ணை வீட்டில் ராஜ உபசாரம், காலாற நடந்து நண்பரது நிலங்களையும், தோட்டங்களையும் சுற்றிப் பார்ப்பது, முதல் கள்ளு, முதல் டிராக்டர் பயணம், பிரிட்ஜ் ஆட்டம், ஒரு சர்க்கரை ஆலைக்கு விசிட், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்த சாஸ்தா நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா என்று ஒரு மூன்று நாட்கள் அமர்க்களமாக கழிந்தன!

நண்பருக்கு விடை கொடுத்து, கிராமத்திலிருந்து மதுரை வந்து, சென்னை செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தேன். நிலையத்தை விட்டு வெளியே வந்தவுடன், போக்குவரத்து நெரிசலால், பேருந்து நின்று விட்டது. எப்போதும் போல் நான் பராக்கு பார்த்துக் கொண்டிருந்தேன். சாலையோரத்துக் கடை ஒன்றில் வெள்ளை வேட்டி, கதர் ஜிப்பா அணிந்து, தங்க பிரேம் மூக்குக்கண்ணாடி போட்டிருந்த நடுத்தர வயதுக்காரர் கடையில் வேலை செய்யும் சின்னப்பையனை பார்த்து, "பழைய புக்கா இருந்தாலும், என்ன புக்குனு பார்க்காம இப்படி கிழிக்கலாமா ? இந்த புக்ல என்ன இருக்குன்னு ஒனக்குத் தெரியுமா? பள்ளிக்கூட பசங்க யாருக்காச்சும் குடுக்கலாம்னு இருந்தேன்" என்று திட்டிக் கொண்டிருந்தார். புக்கின் அட்டையில் ராஜா படம் மாதிரி ஏதோ தெரிந்தது.

நெரிசல் நீங்கி பேருந்து சற்று முன்னோக்கிச் சென்றவுடன், ஞாபகத்தில் பொறி தட்டியது. கழுத்தைத் திருப்பிக் கடையை மறுபடியும் பார்த்தேன். "அரசன் வேஸ்ட் பேப்பர் மார்ட்" என்று எழுதியிருந்த சிறிய பலகை கடையில் தொங்க விடப்பட்டிருந்தது கண்ணில் பட்டது!
********************************

என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, January 14, 2006

பல்லவியும் சரணமும் II - பதிவு 3

சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், (முடிந்தால் திரைப்படத்தையும்) கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

ஓருவர் ஒரு முறை பின்னூட்டமிடும்போது, 3 அல்லது 4 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு எல்லாவற்றுக்கும் விடை தெரிந்திருந்தாலும் கூட :-))

ஏனெனில், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே!

3 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!


1. தேவைகள் எல்லாம் தீராத நேரம் தேவன் நீ வேண்டும் ...

2 மாலைக்கு மாலை காதலன் பேசும் பேச்சுக்கள் பேசிட வேண்டும்....

3. எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ பிறக்கும் ஜென்மங்கள் ...

4. வாசமெல்லாம் ஒரு மாலைக்குள் வாடி விடும் ...

5. தென்றல் தாலாட்ட தென்னை இருக்க ...

6. ஆசை தரும் கனவுகள் எல்லாம் அவனால் தான் நனவுகள் ஆகும் ...

7. என்னென்ன ராகங்கள் நீ மீட்டுவாய் அதில் என்னென்ன வண்ணங்கள் ...

8. ஒரு மனதை உறங்க வைத்தான் ஒரு மனதை தவிக்க வைத்தான்...

9. மனம் கங்கை நதியான உவமை ...

10. பெண்ணே தெய்வம் அன்னை கடவுள் பெருமை என்று பேசுகிறான் ...

11. விழிகளே காதல் விழா நடத்துகிறாள் சாகுந்தலா...

12. எந்தன் மனக்கோயில் சிலையாக அமர்ந்தாள் ...

என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!


என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, January 07, 2006

பல்லவியும் சரணமும் II - பதிவு 2

Popular Demand (கொஞ்சம் பில்டப் வேணுமில்ல!) காரணமாக, 'பல்லவியும் சரணமும்' is back in the NEW YEAR ! இதற்கு ஐகாரஸ் ஒரு முக்கியக் காரணம்! மேலும், சில சீரியஸ் வகை வலைப்பதிவர்களை (ரோசா, ஜெயஸ்ரீ, ஐகாரஸ், ரவி ஸ்ரீனிவாஸ்) என் வலைப்பதிவுக்கு வரவழைக்க வேறொரு மார்க்கமும் என் சிற்றறிவுக்கு புலப்படாததாலும், அவர்களுக்கும் அவ்வப்பொழுது Relaxation தேவை என்பதாலும், இந்த செகண்ட் ரவுண்டை ஆரம்பித்திருக்கிறேன் :-) முன் போலவே, உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்

இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், (முடிந்தால் திரைப்படத்தையும்) கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

ஓருவர் ஒரு முறை பின்னூட்டமிடும்போது, 3 அல்லது 4 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு எல்லாவற்றுக்கும் விடை தெரிந்திருந்தாலும் கூட !

ஏனென்றால், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே! 3 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!


1. அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே ...

2 நல்ல பொழுதாய் யாருக்கும் புலரும்....

3. அன்பே உன் அன்னை அறிவே உன் தந்தை ...

4. அங்கம் எங்கெங்கும் ஆனந்த கங்கை ...

5. இது மாறாதென்றான் இனி நீயே என்றான் ...

6. ஆறு குணங்கள் கொண்டவளாம் ஒரு பாவை ...

7. ஆசை வரும் வயது உந்தன் வயது பேசும் இளம் மனது ...

8. நோய் தீர்க்கும் மருந்தினைப் போன்றவை கற்றவர் கூறும் அறிவுரைகள்...

9. காலமகள் பெற்ற மகள் இரவினிலும் மலர்ந்தாள் ...

10. நடை போடு நடை போடு மனமெனும் தேரில் அழகான மயில் போலவே ...

11. தன்னையே தேய்த்துத் தரும் சந்தனம் உந்தன் உள்ளம்...

12. அந்தப்புரம் போனேன் ராணி முகம் பார்த்தேன், அச்சம் கொண்டு...

என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!


என்றென்றும் அன்புடன்
பாலா

Sunday, January 01, 2006

பல்லவியும் சரணமும் II - பதிவு 1

Popular Demand (கொஞ்சம் பில்டப் வேணுமில்ல!) காரணமாக, 'பல்லவியும் சரணமும்' is back in the NEW YEAR ! இதற்கு ஐகாரஸ் ஒரு முக்கியக் காரணம்! மேலும், சில சீரியஸ் வகை வலைப்பதிவர்களை (ரோசா, ஜெயஸ்ரீ, ஐகாரஸ், ரவி ஸ்ரீனிவாஸ்) என் வலைப்பதிவுக்கு வரவழைக்க வேறொரு மார்க்கமும் என் சிற்றறிவுக்கு புலப்படாததாலும், அவர்களுக்கும் அவ்வப்பொழுது Relaxation தேவை என்பதாலும், இந்த செகண்ட் ரவுண்டை ஆரம்பித்திருக்கிறேன் :-) முன் போலவே, உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்

இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், (முடிந்தால் திரைப்படத்தையும்) கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

ஓருவர் ஒரு முறை பின்னூட்டமிடும்போது, 3 அல்லது 4 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு எல்லாவற்றுக்கும் விடை தெரிந்திருந்தாலும் கூட :-))

ஏனென்றால், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே! 3 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!


1. எனக்காக வாழ்வது கொஞ்சம் உனக்கென்று வாழும் நெஞ்சம், பனி கொண்ட பார்வை ...

2. பொன்னிடம் பாதி, உன்னிடம் பாதி மின்னுவதென்ன சொல்லடி தேவி...

3. உண்ணும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வமே ...

4. நீராட நீ செல்லும் யமுனா நதி, மங்கல மங்கையர் மேனியில் ...

5. காதல் ஒன்று தானே வாழ்வில் உண்மை என்றது, இதழுடன் இதழாட ...

6. மூடும் முந்தானை ஊர்கோலம் செல்லும் போராட்டம் என்ன கோலம் ...

7. வெயில் என்ன மின்னல் என்ன வெண்மை என்ன மஞ்சள் என்ன, காணாத கண்கள் ரெண்டில் ...

8. கொடுத்தால் தானே வாங்கிக் கொள்ள, படுத்தால் தானே விழித்துக் கொள்ள...

9. நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன் ...

10. சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை ...

11. இருளுக்குப் பின் வரும் ஜோதி, இது தான் இயற்கை...

12. அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே...


என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!


என்றென்றும் அன்புடன்
பாலா

Sunday, December 25, 2005

புகை வேலைக்குப் பகை

இன்று ஒரு செய்தி கண்ணில் பட்டது. இங்கிலாந்தில் ஒரு பெண்மணி பணிக்குச் சேர்ந்து முக்கால் மணி நேரத்தில், தன் மேலாளரிடம் தான் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர் என்று ஒப்புக் கொண்டு வேலையை இழந்தார் ! டாடா ·ப்ளோ கம்யூனிகேஷன்ஸ் என்ற அந்த நிறுவனம், அப்பெண் பணி நேரத்தில் புகை பிடிக்க மாட்டேன் என்று உறுதி கூறியும், புகை பிடிப்பவரை பணிக்கு அமர்த்துவதை நிறுவனத்தின் பாலிஸி அனுமதிப்பதில்லை என்று கூறி விட்டது !

ஒருவர் பணிக்கு ஏற்றவரா என்று நிர்ணயிப்பதற்கு பல முக்கியத் தகுதிகள் இருக்கையில், புகை பிடிப்பவர் பணியில் சேர தடை விதிக்கும் நிறுவன நிர்வாகத்திற்கு எதிராக சட்டபூர்வமாக நடவடிக்கை கோரப் போவதாக ஸோ·பி என்ற அப்பெண் கூறியிருக்கிறார். நேர்முகத் தேர்வின் போது புகை பிடிப்பது குறித்து தன்னை எதுவும் கேட்காமல் விட்டது யார் குற்றம் என்றும் கேள்வி எழுப்புகிறார்.

நிர்வாகமோ, தங்கள் பாலிசி சட்டத்திற்குட்பட்டது தான் என்றும், அவ்வாறு புகை பிடிப்பவரை பணியில் சேரா வண்ணம் நேர்மறையாக ஒதுக்குவதில் (positive discrimination) நிறுவனம் பெருமைப்படுகிறது என்றும் மார் தட்டுகிறது! புகை பிடிப்பவரின் உரிமையை வலியுறுத்தும் FOREST என்ற அமைப்போ, நிறுவன வளாகத்துள் புகை பிடிக்கத் தடை விதிப்பது என்பது வேறு, புகை பிடிப்பவரை பணிக்கு அமர்த்த தடை என்பது அராஜகம் என்று கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

இந்தக் கூத்தையெல்லாம் பார்த்தா, நம்ம அமைச்சர் அன்புமணி எவ்வளவோ பரவாயில்லைன்னு தோணுதுங்க, என்ன நான் சொல்றது ;-)

என்றென்றும் அன்புடன்
பாலா


நன்றி: Deccan Chronicle

Saturday, December 17, 2005

நன்றி கெட்ட மாந்தரடா! Ganguly அறிந்த பாடமடா!

இந்திய கிரிக்கெட்டில் அரசியலும், அநியாயச் சார்பும், டால்மியாவின் இரும்புப் பிடியிலிருந்து கிரிக்கெட் வாரியம் விடுபட்டதால், குறைந்து விடுவதற்கு வாய்ப்பிருப்பதாக பலரும் நம்பிக் கொண்டிருந்த வேளையில், டெஸ்ட் அணியிலிருந்து கங்குலியை நீக்கிய செயல், எதுவும் மாறவில்லை என்பதை நிரூபித்துள்ளது! கங்குலியை விலக்கியதற்கு நாற்றமிகு அரசியலே காரணம் என்று எண்ணுவதற்கு காரணங்கள் உள்ளன! இத்தனைக்கும், தில்லி டெஸ்டில் அவர் அணியின் நலன் கருதி பொறுப்பாகவே விளையாடினார். முதல் இன்னிங்க்ஸில் சச்சினுடனும், இரண்டாவதில் யுவராஜுடனும் கங்குலி கூட்டு சேர்ந்து விளையாடியதில், அணிக்கு முறையே 121 ரன்களும், 81 ரன்களும் கிடைத்தன. அவற்றில், கங்குலி எடுத்தது, 40 மற்றும் 39 ரன்கள். தகுதி அடிப்படையில் அவர் நீக்கப்பட்டார் என்றால், அவரை விட 2 ரன்களே அதிகம் எடுத்த லஷ்மண் மற்றும் 2 டெஸ்டுகளில் 2 விக்கெட்டுக்களை மட்டுமே வீழ்த்திய அகர்கரும் என்ன கிழித்தார்கள் ?

கிரன் மோரே என்னும் மடையரின் தலைமையில் உள்ள தேர்வுக்குழு தாங்கள் ஜோக்கர்கள் என்பதை உணர்த்தியுள்ளனர் ! தேர்வுக்குழு தலைவராக நீடிக்க வேண்டும் என்பதற்காக, மோரே எப்படி பச்சோந்தியாக மாறி பவார் தரப்புக்கு ஓடினார் என்பது நாம் அறிந்தது தான்! கங்குலியின் பல செயல்களில் எனக்கு ஒப்புதல் இல்லாவிட்டாலும், எதற்கு அவரை 'ஆல்ரவுண்டர்' என்று கூறி அணியில் சேர்த்து விட்டுப் பின் நியாயமான காரணமின்றி விலக்க வேண்டும் என்பதே ஆதாரக் கேள்வி. திமிர் பிடித்த மோரே தேர்வுக்குப் பின் நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில், கங்குலி நான்காம் இறக்கத்தில் (4 DOWN) ஆட வருவது தனக்கு விருப்பமில்லை என்கிறார்!!! இவரது தனிப்பட்ட விருப்பத்தை யார் கேட்டார்கள் ? கிட்டத்தட்ட 15000 ரன்கள் எடுத்து சாதனை புரிந்துள்ள ஒருவரை, கவைக்குதவாத ஐந்து ஜால்ராக்கள் தூக்கி எறிவதைப் பார்க்கும்போது எரிச்சல் மண்டுகிறது !!!

கிரன் மோரையை விடுத்து மீதமுள்ள நான்கு உறுப்பினர்களில் இருவருக்கு கிரிக்கெட் விளையாட்டுடன் ஸ்நானப்பிராப்தி கிடையாது ! மற்றும் பூபிந்தர் சிங் என்பவர் 2 ஒரு நாள் போட்டிகளிலும், VB சந்திரசேகர் 5 ஒரு நாள் பந்தயங்களிலும் விளையாடி இருக்கின்றனர் ! தேர்வுக்குழுவில், எப்பேர்ப்பட்ட கிரிக்கெட் அனுபவம் நிறைந்திருக்கிறது, பாருங்கள் !?! இதில், அடிப்படைப் பிரச்சினை, தேர்வுக்குழு உறுப்பினரின் நேர்மை, கிரிக்கெட் அறிவு மற்றும் அனுபவம் ஆகியவை கேள்விக்குறி ஆகி விட்டன.

தேர்வுக்குழு உறுப்பினர் என்பவர், குறைந்த பட்சம் 25 டெஸ்ட்களிலோ, 40 ஒரு நாள் போட்டிகளிலோ விளையாடியவராக இருப்பது ஓர் அவசியமான தகுதியாக நிர்ணயிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுளது. மேலும், தேர்வுக்குழுவை நிறுவதில் வெளிப்படையான ஒரு தேர்வு முறை இருப்பதும், உறுப்பினர்களுக்கு தகுந்த ஊதியமும் வழங்கப்படுவதும் அவசியமாகிறது. நல்ல சன்மானம் இல்லாததால் தான், திறமை மிக்க ரவி சாஸ்திரி, நவ்ஜோத் சித்து, மொகிந்தர் அமர்நாத் போன்றவர்கள் உறுப்பினர் பதவியை ஏற்றுக் கொள்ள முன் வருவதில்லை.

கங்குலி விலக்கப்படுவதற்கு முந்தைய தினம், சாப்பல், கங்குலி நன்றாக விளையாடுவதாக நம்பிக்கை தெரிவித்து விட்டு, அடுத்த நாள் தேர்வுக்குழு கூட்டத்தில் என்ன கூறினாரோ ? அதனால், கங்குலியின் நீக்கத்தில், அணியை நல்ல முறையில் வழி நடத்திக் கொண்டிருக்கும் சாப்பலுக்கும், டிராவிட்டுக்கும் பங்கிருக்கும் என்றும் எண்ணத் தோன்றுகிறது. டிராவிட் கூறிய, "That is the way International cricket is!" மற்றும் கங்குலிக்கு ஆதரவாகப் பேசியவர்களைக் குறித்துக் கூறிய, "They don't represent the Indian public" போன்றவை மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன! கேப்டன் ஆன சில மாதங்களிலேயே இப்படி ஒரு மாற்றமா ? இத்தனைக்கும் இதே டிராவிட் ஒரு நாள் பந்தயங்களுக்கு லாயக்கிலாதவர் என்ற சர்ச்சை எழுந்தபோது, கங்குலி அவருக்கு தோள் கொடுத்தவர் தான் !

லஷ்மிபதி பாலாஜியும், சகீர் கானும் அணியில் இடம் பெறாததற்கு என்ன காரணம் என்று புரியவில்லை. சகீர் கானிடம் திறமை இருந்தாலும், Attitude சரியில்லை என்று சொல்லப்படுகிறது. அதை சரி செய்து, அவரது திறமையை அணிக்கு பலம் சேர்க்கும் வகையில் பயன்படுத்திக் கொள்வதும் பயிற்சியாளரின் பணிகளில் ஒன்று இல்லையா ? இல்லையெனில், எதற்கு சாப்பலுக்கு இவ்வளவு தண்டம் அழ வேண்டும் ? பாப் உல்மர், attitude சரியில்லாத ஷோயப் அக்தரை மாற்றி, அவரை சரியான வழியில் நடத்திச் சென்றதன் விளைவாக, இங்கிலாந்துக்கு எதிரான பாகிஸ்தானின் 2-0 டெஸ்ட் தொடர் வெற்றியில், அக்தர் பிரகாசிக்கவில்லையா ?

சமீபத்திய இந்திய வெற்றிகளுக்குப் பின், இப்போதுள்ள இந்திய அணியை, சாப்பலும் டிராவிட்டும் உருவாக்கியது போல ஒரு மாயை நிலவுகிறது. ஓரளவு அணிக்கு மெருகு கூடியிருக்கிறது என்பது மட்டுமே உண்மை. போகப் போகத் தான் பார்க்க வேண்டும்! கங்குலி சில தவறுகள் செய்திருக்கிறார். ஆனால், வீரேந்திர சேவாகை துவக்க ஆட்டக்காரராக பரிமளிக்க வைத்தது, யுவராஜையும், ஹர்பஜனையும் பல வாய்ப்புகள் தந்து அணியில் தக்க வைத்துக் கொண்டது, தோனியையும், கை·பையும் ஊக்குவித்தது என்று சில நல்ல விஷயங்களுக்கும் அவர் காரணமாக இருந்துள்ளார். அப்படிப்பட்டவரை, அவர் நீக்கப்பட்டவுடன், அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறைப்பக்கம் கூட எட்டிப் பார்க்காமல், சக ஆட்டக்காரர்கள் நிராகரித்தது வேதனையான ஒரு விஷயம் ! "நன்றி கெட்ட மாந்தரடா, கங்குலி அறிந்த பாடமடா!" (இப்பதிவின் தலைப்புக்கு காரணம் வேண்டும் அல்லவா !!!) என்று தான் சொல்ல வேண்டும் !

கங்குலிக்கு இப்போது எழுந்துள்ள ஆதரவை வைத்துப் பார்க்கும்போது, கிரிக்கெட்டிலிருந்து அவர் ஓய்வு பெற்றால் கூட, மேற்கு வங்க அரசியலில் அவருக்கு மிகப் பிரகாசமான எதிர்காலம் இருப்பதாகவே தோன்றுகிறது :-) கங்குலியின் நீக்கம் குறித்து பாராளுமன்றத்தில் கூட விவாதம் நடக்க இருப்பதாக ஒரு செய்தி வந்துள்ளது !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

Sunday, December 04, 2005

வருணனுக்கு ஒரு திறந்த மடல் !

அன்பு (இல்) வருணா,

நலமா ? நாங்கள் நலமில்லை ! நீர் அனுப்பிய நீர் போட்ட ஆட்டத்தில், நார்மலாக கலகலப்பாக இருக்கும் ஐகாரஸ¤க்குக் கூட டிப்ரஷன் வந்து, உங்களுக்கு ஒரு லெட்டர் தட்டி விட்டுள்ளார்! பிரகாஷ் கூறியது போல், நான் கூட ஓரிரு தடவை, மழையில் மாட்டிக் கொண்டபோது, "சனியன் பிடித்த மழை" என்று கோபத்தில் உம்மைத் திட்டியிருக்கிறேன். அதற்காக இவ்வளவு பெரிய தண்டனையா ? நானும் (என் பங்குக்கு) இந்த மடலை எழுதுவதற்குக் காரணம், பலர் சேர்ந்து எடுத்துரைத்தாலாவது, தமிழக மக்களுக்கு உம்மால் ஏற்பட்ட அவதியை புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை தான் ! தைரியசாலியான டோண்டு ராகவன் கூட, தண்ணீர் புகுந்த தன் நங்கநல்லூர் வீட்டில் கலவரத்தில் இருக்கிறார் என்பது அவரது "மழை"ப் பதிவுகளில் தெரிகிறது !

கடந்த சில வருடங்களாக கோயில் கோயிலாக பூசை செய்தும், தமிழகம் பக்கம் எட்டிப் பார்க்காத தாங்கள், இவ்வருடம் முன்னதாகவே அழையாத விருந்தாளியாக வந்து, பொழிந்து தள்ளி விட்டதன் விளைவாக, தமிழ்நாடு அமிழ்நாடாகி விட்டது, சென்னை நீர் நிரம்பிய தொன்னை போல் காட்சியளிக்கிறது! ஏதோ வந்தோமா, ரெண்டு காட்டு காட்டினோமா, போனோமா என்றில்லாமல், இப்படி அழும்பு பண்ணினால் எப்படி ? உமது கைங்கர்யத்தால், இவ்வளவு நாள் பெயர் கேள்விப்படாத ஏரிகளும், குளங்களும், குட்டைகளும் நிரம்பி வழிவதை பார்க்கிறோம் !

சாலைகள் சீரழிந்து, பல கிராமங்கள் விழுங்கப்பட்டு, பயிர்களையும், உயிர்களையும் இழந்து, உங்களால் எம் மக்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பு உம்மைத் தொடவில்லையா ? நிலைமை ஓரளவு சீரடையவே பல மாதங்கள் ஆகும் என்று தோன்றுகிறது, பல கோடி செலவு செய்து பொருளாதாரத்தையும் சீரமைக்க வேண்டும். தொடர்ந்து, ககன்தீப் சிங் போன்ற நல்ல, திறமையான மாவட்ட ஆட்சியாளர்களையே நீர் பாடாய் படுத்துகிறீர்! அவர்களும் அயராது மக்கள் துயர் துடைக்க போராடி வருகின்றனர்.

நீர் அடித்த லூட்டியால், எப்போது போல, ஏழை மக்களும், நடுத்தர மக்களும் பெரும்பாதிப்புக்கு உள்ளாகி பரிதவிக்கின்றனர். எப்போது போல், அரசியல்வாதிகள், மழையால் ஏற்பட்ட மக்கள் பிரச்சினைகளை வைத்து, வரும் தேர்தலை எதிர் கொள்வதைப் பற்றி யோசித்து வருகின்றனர்! நிவாரணப் பணிகளை மேற்கொள்வதிலாவது, ஆட்சியில் உள்ள அதிமுகவினரும், திமுகவினரும் இணைந்து செயல்படுவார்கள் என்ற உம் எண்ணத்தில் மண் தானே விழுந்தது ?!? ஊடக வெளிச்சத்தில் இருக்க வேண்டும் என்ற உமது பேராசையால், தற்போது, முப்பது நிமிடச் செய்திகளில், 27 நிமிடங்கள் தமிழகத்தில் உங்கள் கொட்டம் பற்றிய பேச்சு தான் ! வருண உபயத்தில், தமிழக வானிலை மையமும், அதன் இயக்குனரும் கூட ஊடக வெளிச்சத்தில் !

இந்த வாரத்தின் முதல் நான்கு நாட்கள் மழையின்றி சற்று உலரத் தொடங்கியிருந்த சென்னையில், சரியாக டெஸ்ட் மேட்ச் தொடங்கவிருக்கும் அன்று, Baaz-யை ஓர் உலுக்கு உலுக்கி, பேய் மழையை வரவழைத்து, கிரிக்கெட் ரசிகர்களை கடுப்படித்தீர்கள் ! உமக்கும், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் உள்ள பிரச்சினையில், எங்களை இப்படி அலைக்கழிக்கலாமா ? நீங்கள் ஹை பிரஷரில் பீடிக்கப்பட்டதாலோ என்னவோ, வங்கக் கடல் மேலே எந்நேரமும் லோ பிரஷர் !

திருப்பாவை நாச்சியார், "மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் (ரொம்பாவாய் அல்ல!)" என்று தானே உம்மை வேண்டினார் ? மாறாக, ஐப்பசி, கார்த்திகை மாதங்களிலேயே மக்களை தண்ணீரில் மூழ்கடித்து மூச்சுத் திணற வைத்து இப்படி பாடாய் படுத்தினால், மார்கழியில் நீராட தெம்பு வேண்டாமா ? "வாழ உலகினில் பெய்திடாய்" என்பதை "தாழ உலகினில் பெய்திடாய்" என்று புரிந்து கொள்ளுதல் முறையா ?

இறுதியாக, "துளித்துளி துளித்துளி மழைத்துளி, அது தொடத் தொட சிலிர்த்தது மலர்க்கொடி", "மழையே, மழையே இளமை முழுதும் நனையும் வரையில் வா", "மழை வருது மழை வருது குடை கொண்டு வா, மானே உன் மாரப்பிலே", "பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம், நீயும் ஒத்துக்கிட்டு கூட வர வேணும்", "நீ வரும்போது நான் மறைவேனா" என்று அன்று முதல் இன்று வரை தொடர்ந்து எங்கள் திரைப்படங்களில் கதாநாயகிகளை மழையில் நனைய வைத்து, உம்மைக் குஷிப்படுத்தியதற்கு நீர் காட்டும் நன்றி விசுவாசம் இது தானா ?!?

என்னவோ போங்க, ஒண்ணும் சரியில்ல !

என்றென்றும் அன்புடன்
பாலா

பி.கு: எனக்கென்னவோ, தேவைக்கு அதிகமாக மழை பெய்து விட்ட நிலையில், வானிலை மையம் தினமும் (குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகிறதோ இல்லையோ!) "இன்று கனமழை பெய்யும், பலத்த காற்று வீசும்!" என்று சும்மாங்காட்டியும் அறிக்கை விட்டாலே, வருணன் தன் வேலையை நிறுத்திக் கொள்வார் என்று தோன்றுகிறது ! தற்போதைய சூழலில், வானிலை மையத்திடம் கேட்டுப் பார்த்தால், இதற்கு ஒப்புக் கொள்வார்கள் என்றே நினைக்கிறேன் ;-)

சற்று சீரியஸாக, மழையால் பாதிக்கப்பட்ட ஏதாவது ஒரு கிராமத்திற்கு, நாம் கூட்டாக, ஒரு சிறிய அளவில் உதவி செய்யலாமே. உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

Saturday, November 26, 2005

Dalmiya-வின் ஆடுகள அரசியல்

டால்மியாவும் அவரது அடிவருடிகளும் சேர்ந்து கொண்டு அரங்கேற்றிய அபத்த அரசியல் நாடகத்தின் விளைவாக, கல்கத்தாவில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் நேற்று மண்ணைக் கவ்வ நேர்ந்தது. பொதுவாக, எந்தவொரு நாட்டின் கிரிக்கெட் வாரியமும், இன்னொரு நாட்டு அணி தம் நாட்டில் விளையாட வரும்போது, தமது அணிக்கு சாதகமாக ஆடுகளங்கள் அமைப்பது, நடைமுறையில் காணப்படும் ஒன்றாகும்.

இதற்கு மாறாக, பிரபிர் முகர்ஜி என்ற திமிர் பிடித்தவரின் மூளை குழம்பியதின் விளைவாக, அவர் "SPORTING WICKET" என்ற பெயரில், KINGSMEAD-க்கு இணையான ஆடுகளம் ஒன்றை உருவாக்கியதற்கு, BCCI-யில் தற்போது நிலவி வரும் உட்பூசலும் ஒரு முக்கியக் காரணமாகும். பணம் கொடுத்து, பல மணி நேரம் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி, பலவித சிரமங்களுக்கிடையில் அரங்கிற்கு வரும் ரசிகர்களை ஏமாற்றிய, வெறுப்பேற்றிய இந்தக் கோமாளி பிரபிர் முகர்ஜியின் மேல் என்ன நடவடிக்கை எடுக்க இயலும் என்று தெரியவில்லை ?!?!

இதே போல், கடந்த வருடம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு, ஷரத் பவாரின் கட்டுப்பாட்டில் இருக்கும் விதர்பா கிரிக்கெட் சங்கம் , டால்மியாவைப் பழி வாங்குவதாக நினைத்துக் கொண்டு, நாக்பூரில் பசுமையான ஆடுகளத்தை தயாரிக்க வைத்து, கிரிக்கெட் வீரர்களை (கிரிக்கெட்டையும்!) பலிகடாக்களாகவும், ரசிகர்களை முட்டாள்களாகவும் ஆக்கியது குறிப்பிட வேண்டியது. கிரிக்கெட் அரசியலில் "தாதா"வான கங்குலி கடைசி நிமிடத்தில் (உடல்நிலையை காரணம் காட்டி!) ஆட்டத்திலிருந்து விலகினார்! டிராவிட் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி தோல்வி அடைந்து ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரையும் (பல வருட காத்திருப்பிக்குப் பின்!) கைப்பற்றியது.

ஏற்கனவே, கங்குலி ஒரு நாள் போட்டிகளில் தேர்ந்தெடுக்கப் படாததால் கடுப்பில் இருந்த, நேற்று மைதானத்திலிருந்த கங்குலி ரசிகர்கள் (வெறியர்கள்!) இந்தியா 71-5 என்று சரிந்தபோது, "டிராவிட் ஒழிக", "சாப்பல் ஒரு கழுதை", "சச்சின் ஹை ஹை" என்று (டால்மியாவும், முன்னாள் கேப்டனும் எதிர்பார்த்தது போலவே!) கூக்குரலிட்டனர்! பொதுவாக, நேற்று கொல்கத்தாவில், தென்னாப்பிரிக்காவுக்கு பலத்த ஆதரவு காணப்பட்டதில், கொல்கத்தா கிரிக்கெட் வெறியர்களைப் பற்றி அறிந்தவர்களுக்கு பெரிய ஆச்சரியம் ஏதுமில்லை!

கங்குலி டெஸ்ட் அணியில் "ஆல்ரவுண்டர்" (கிரன் மோரேயின் கூற்றின்படி!) என்ற போர்வையில் சேர்க்கப்பட்டுள்ளார். 33 வயதில், திடீரென்று அவர் எப்படி ஆல்ரவுண்டர் ஆனார் என்பது புரியாத புதிர்! அப்படியானால், கபில்தேவையும், ·பிளின்டா·வையும், இம்ரான் கானையும் என்னவென்று அழைப்பது ??? என்ன ஒரு கேலிக்கூத்து இது ? இதனால், சமீபத்திய உள்ளூர் ஆட்டங்களில் நன்றாக ஆடிய ஜகீர்கான் டெஸ்ட் அணியில் இடம் பெற முடியாமல் போனது.

அணிக்குள் பின்புறக் கதவு வழியாக பிரவேசித்திருக்கும் கங்குலி, ஏதாவது அரசியல் பண்ணி, அணியின் ஒற்றுமையைக் குலைத்து, டிராவிட்டுக்கு தலைவலி தர மாட்டார் என்று நம்புவோம்!!! அதற்கு, வரும் BCCI தேர்தல், டால்மியாவுக்கும், அவரது அடிவருடிகளுக்கும் முடிவு கட்ட வேண்டும். BCCI-யிலும் மாநில அளவிலும் முக்கியப் பதவிகளில் இருக்கும் சில அரசியல் தரகர்கள் நடத்தும் கேவலமான அரசியல் விளையாட்டிலிருந்தும், அதனால் ஏற்படும் அவல நிகழ்வுகளிலிருந்தும் கிரிக்கெட்டுக்கு என்று தான் விடிவு காலம் வருமோ ?! உண்மையான கிரிக்கெட் ரசிகர்கள், நேற்று நடந்தேறிய கூத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அடுத்து வரும் இரண்டொரு ஆட்டங்களை புறக்கணித்தாலாவது, BCCI திருந்துவதற்கு வழி பிறக்கலாம் !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

Monday, November 21, 2005

கலாச்சாரக் கோவலர்கள் - உஷார்

குஷ்பு விவகாரத்தில் அவருக்கு ஆதரவாகக் குரலெழுப்பிய சுகாசினி "கலாச்சாரக் காவலர்களின்" பிரதிநிதிகளால் அலைக்ககழிக்கப்படுவதைத் தொடர்ந்து, குஷ்புவுக்கு ஆதரவாகப் பேசியதாக, தற்போது, சானியா மிர்ஸாவும் சிக்கலில் மாட்டியுள்ளார். விசாகப்பட்டினத்திலிருந்து ஹைதரபாத் வரை, அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறிக் கொண்டு, ABVP (Akhil Bharathiya Vishwarthi Parishad) மற்றும் பெயரில்லா முல்லாக்களின் ஆதரவாளர்களும் (இம்மாதிரி விவகாரங்களில் இவர்கள் ஒரே மாதிரி சிந்திப்பதில் ஆச்சரியம் இல்லை!) பல இடங்களில் பெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சானியா படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து, அவரது உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் போட்டுக் கலக்கியதில், சானியா கலங்கிப் போய் பின் வாங்கி விட்டார்!!!

குஷ்பு கூறிய கருத்துக்கள் குறித்து பல பதிவுகள் வந்து விட்டன. இந்தியா டுடே கருத்துக் கணிப்பு குறித்த பேட்டியில் அவர் சொன்னவை இரண்டு விஷயங்கள். ஒன்று, திருமணத்திற்கு முன் பாலியல் உறவு கொள்ள முற்படும் பெண்கள் பாதுகாப்பான முறையை கை கொள்ள வேண்டும். மற்றொன்று, எந்த படித்த ஆணும் தனக்கு வரப்போகும் மனைவி "கற்புள்ளவளாக" (அதாவது, திருமணத்திற்கு முன் மற்றொரு ஆடவனுடன் பாலியல் உறவு கொள்ளாதவளாக) இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். இவற்றை சில ஊடகங்களும், கலாச்சாரக் காவலர்களும் போட்டுக் (திரித்துக்) கலக்கியதில் தமிழகத்தில் குட்டை குழம்பி, சிலருக்கு மூளையும் குழம்பி விட்டது! இக்கருத்துக்களை எதிர்ப்பவர்கள், என்ன செய்திருக்க வேண்டும் ? திருமணத்திற்கு முன் ஒரு பெண் பாலியல் உறவு கொள்ளாமல் இருப்பதன் அவசியத்தையும் (உன்னதத்தையும்), ஓர் ஆண் 'கற்புள்ள' பெண்ணை மனையாளாகப் பெறுவதால் கிடைக்கும் பெரும் சிறப்பையும் மேடை போட்டு விளக்கியிருக்க வேண்டும் (அல்லது அவை குறித்து துண்டு பிரசுரங்களை மக்களிடையே விநியோகித்திருக்க வேண்டும்!) அல்லவா !?! மேற்கூறிய இரண்டையும், தமிழ் கலாச்சாரப்படி, ஆடவர்களுக்கு பொருத்திப் பார்க்கவே கூடாது !!! அவர்கள் சுதந்திரப் பறவைகள் !!!

"ஒருவனுக்கு ஒருத்தி" என்பது நம் தமிழ் கலாச்சாரமாகவே இருக்கட்டும்! நானும் இக்கருத்தை ஆதரிப்பவன் தான்! அதற்காக, சகிப்புத் தன்மை துளியும் இன்றி, செருப்பு, விளக்குமாறு, அழுகிய தக்காளி, முட்டை, கழுதையின் துணை கொண்டு, ஆர்ப்பாட்டமாக கண்டனம் தெரிவித்து, தனிமனித சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் இத்தகைய அராஜகப் போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது. முன்பொரு முறை, தேர்தலில் தோற்ற கலைஞர் அவர்கள், தமிழனை "சோற்றாலடித்த ஏதோ" ஒன்றாக
வர்ணித்திருந்தார். அப்போது, எங்கே போயிருந்தனர், இப்போது பயங்கரமாக எதிர்ப்பு தெரிவிக்கும், மான உணர்ச்சி மிக்க, இவர்களெல்லாம் ?

"திருமணத்திற்கு முன் உறவு" என்பது ஒருவருக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம் .... அதனால், ஒரு பெண் சமூகத்தில் சந்திக்க நேரிடும் சங்கடங்களுக்காகவும், அப்பெண்ணின் வாழ்க்கை திசை மாறிச் செல்லக்கூடிய ஆபத்திற்காகவும்! அத்தகைய நிலை ஏற்படாமல் இருப்பது, நன்னடத்தை கொண்டவராக பிள்ளைகளை (ஆண், பெண் ஆகிய இருபாலரையும்!) வளர்ப்பதும், குடும்பச் சூழலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதும் மூலமாக பெருமளவு பெற்றோரின் கைகளிலும், ஓரளவு கல்வி அமைப்பிலும், ஆசிரியர் கைகளிலும் உள்ளது என்பது நிதர்சனம்.

இதைக் கூட புரிந்து கொள்ளாமல், யாரோ தூண்டி விட, இந்த "கலாச்சார மெய்க்காவலர்கள்" 'தையத்தக்கா' என்று குதிப்பதும், மாவட்டம் மாவட்டமாக வழக்கு போடுவதும் போன்ற கேலிக்கூத்து எதுவும் இல்லை. அதே நேரத்தில், சுகாசினி குஷ்புவுக்கு ஆதரவாக நிலை எடுத்ததோடு நில்லாமல், "ஒட்டு மொத்தத் தமிழர்களின் சார்பாக மன்னிப்பு கேட்பதாக" ஸ்டண்ட் அடித்திருக்க வேண்டாம். என் சார்பில் மன்னிப்பு கேட்க அவர் யார் என்பதற்காக இதைக் கூறவில்லை. குஷ்புவை எதிர்ப்பவர்களின் எண்ணிக்கையை விட அவர் கருத்தை வெளியிட அவருக்கு முழு உரிமை உண்டு என்று நம்புபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் !!! ஆனால், அவர்களில் பலர் 'நமக்கேன் வம்பு' என்று மௌனிகளாக இருக்கிறார்கள்.

இந்த வார ஆ.விகடனில் மூத்த பத்திரிகையாளர் ஞாநி சிந்திக்கத் தக்க வகையில் சில கருத்துக்களை கூறியிருக்கிறார். அதே போல், சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கத்தின் துணைத் தலைவர் சுதா ராமலிங்கம், 'மகளிர் உலகம்' என்ற அமைப்பைச் சேர்ந்த அம்மு ஜோசப், வசந்த் கண்ணபிரான், ரித்து மேனன் மற்றும் தேசிய மகளிர் கமிஷன் தலைவர் திருமதி கிரிஜா வியாஸ் ஆகியோர் இத்தகைய கண்டன ஆர்ப்பாட்டங்கள் பெரும்பாலும் பெண்களுக்கு எதிராகவே, அவர்களை ஒடுக்குவதற்காகவே பயன்படுத்தப்படுகின்றன என்று கருத்து தெரிவிக்கிறார்கள். இன்று, நிதியமைச்சர் ப.சிதம்பரமும், RSS-உம் (?) குஷ்புவுக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார்கள்.

சுகாசினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோருபவர்களில் ஒருவரான பேராசிரியர் தமிழண்ணல் கூறியிருப்பதைப் பாருங்கள்! "தமிழர்கள் மான உணர்ச்சியும், நாண உணர்ச்சியும் மிக்கவர்கள். இவற்றை இழந்தவர்கள் தான் உளறுவார்கள்" என்கிறார்! கண்டனம் தெரிவிக்கின்ற போர்வையில் ஒரு பெண்ணை இவ்வாறு இழிந்து பேசுவது மட்டும் சரியா ??? பேராசிரியர் பழனியப்பன், தமிழ் மக்களுக்கு கலவியை விட உடல் பெரிது, உயிர் பெரிது, மானம் பெரிது, தமிழும் மானமும் வேறு வேறு அல்ல என்று ஏதேதோ வசனம் பேசி விட்டு, சுகாசினி இவை குறித்து அறியாததற்குக் காரணம் அவர் "வந்த வழி அப்படி" என்கிறார்! பெரியார்தாசன் ஒரு படி மேலே போய், "மனிதர்களின் பிரதிநிதியாக ஆவதற்கு மாடுகளுக்கு தகுதியில்லை" என்று தனி நபர் தாக்குதலில் இறங்குகிறார். கல்வியாளர்களே இப்படி இருந்தால், பாமரனிடம் எப்படி சகிப்புத் தன்மையை எதிர்பார்க்க இயலும் ?!?!

லேட்டஸ்டாக, திருமா விஜயகாந்துக்கு வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியிருக்கிறார்! அதில், நடிகர் சங்க உறுப்பினரான குஷ்பு, சுகாசினி ஆகியோர் பொதுமக்களுக்கு 'எதிராக' கருத்து கூறியதாகவும், பொதுமக்களுக்கு 'விரோதமாக' செயல்படுவதாகவும், அவர்களை சங்கத்தை விட்டு நீக்க வேண்டும் எனவும், இல்லாத பட்சத்தில் தமிழ்நாடு சங்க சட்டப்படி, கோர்ட் மூலம் நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் கூறப்பட்டிருக்கிறது! என்னத்த சொல்ல ?!!?

குஷ்புவின் கருத்துக்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தந்து, அவற்றை மிகத் தீவிரமாக எதிர்த்த கலாச்சாரக் காவலர்களின் செயல்களினால், அரசியல் களத்தில் குஷ்பு ஒரு Worthy Adversary என்ற பிம்பம் மக்களிடையே உருவாகி வருவதன் விளைவாக, பிற்காலத்தில், தமிழ்நாட்டுக்கு ஒரு வடநாட்டுப் பெண்மணி முதலமைச்சராக வரக் கூடிய வாய்ப்பு பிரகாசமாக உள்ளது :)

கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான, துளியும் சகிப்புத்தன்மை அற்ற, இப்போக்கை கண்டித்து, கருத்துச் சுதந்திரத்தின் பால் நம்பிக்கை வைத்துள்ள அனைவரும் (ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் ...)இப்போது வாயைத் திறக்க விட்டால், கலாச்சாரக் கோவலர்களின் அனுமதியின்றி, பிறகு எப்போதும் வாயைத் திறக்க இயலாத ஓர் அவலமான சூழல் எதிர்காலத்தில் உருவாகி விடும் அபாயம் உள்ளது. தனிமனித கருத்துச் சுதந்திரத்தை கேள்விக் குறியாக்கும் இத்தகைய போக்கு குறித்து, தற்போது நீதிமன்றங்களில் இவ்விவகாரம் தொடர்பாக அனுமதிக்கப்பட்டிருக்கும் பல வழக்குகளின் விசாரணை மற்றும் தீர்ப்பு வாயிலாக, நீதியரசர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

நன்றி: தமிழ் முரசு, குமுதம் ரிப்போர்ட்டர்

நினைவூட்டல்: இப்பதிவைப் படிக்கும் வாசக நண்பர்கள் மறக்காமல், (பின்னூட்டுவதற்கு விருப்பமின்மையோ, நேரமின்மையோ காரணமாக இருந்தாலும்!) தயவு செய்து, தங்கள் ஆதரவையோ எதிர்ப்பையோ +/- வாக்கு வாயிலாக தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் !!!

Friday, November 11, 2005

தினமலரும் என் வலைப்பதிவும்!

கிட்டத்தட்ட 3 வாரங்களுக்கு முன் அனானி நண்பர் ஒருவர் என் பதிவின் பின்னூட்டத்தில் என் வலைப்பதிவு பற்றி தினமலரில் குறிப்பு வந்திருப்பதாகக் கூறியிருந்தார். ஆனால், உரலை அவர் குறிப்பிடாததால், அதை விட்டு விட்டேன். இப்போது சற்று பிரயத்தனப்பட்டு, தினமலர் வலைத்தளத்தில் தேடி அக்குறிப்பு அக்டோபர் 16ஆம் தேதி வந்துள்ளதை அறிந்து கொண்டேன். மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு !!! அவ்வுரல் கீழே:

http://dinamalar.com/2005oct16/flash.asp



தினமலருக்கு (தமிழ்மணத்திற்கும், அதன் வாயிலாக எனக்குக் கிட்டிய வாசக நண்பர்களுக்கும் கூடத் தான்!) என் நன்றி !

என்றென்றும் அன்புடன்
பாலா

*169*

Saturday, October 22, 2005

தமிழ்மணமும் ...

தமிழ்மணத்திலிருந்து தற்போது நீக்கப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளை விலக்கியது சரியானதா என்று பலர் தத்தம் கருத்துக்களை முன் வைத்துள்ளனர். சில கருத்துக்களை சக வலைப்பதிவருடன் பகிர்ந்து கொள்ளத் தோன்றியதன் விளைவே இப்பதிவு!

1. ஒருவர் தன் பதிவில் முன் வைக்கும் கருத்துக்களுக்கு, சிலருக்கோ / பலருக்கோ மாற்றுக் கருத்துக்கள் இருக்கும். அவற்றை, நாகரீகமான வகையில், சம்மந்தப்பட்ட பதிவின் பின்னூட்டக் களத்திலோ அல்லது தனிப்பதிவாகவோ இட மற்றவருக்கு நிச்சயம் உரிமை உண்டு. ஆனால், ஒருவரைப் பற்றிய இரங்கல் பதிவையும், அதில் இடப்பட்ட பின்னூட்டங்களையும் பகடி செய்வது சரியான செயலாகத் தோன்றவில்லை. மதி தமிழ்மணத்திற்கு செய்து வரும் சேவை மற்றும் அவரது எழுத்துக்களை முன் வைத்து அவருக்கென்று ஒரு வாசகர் வட்டம் உள்ளது. அதனால் அவரது பதிவுகள் அதிக அளவில் வாசிக்கப்பட்டும், பின்னூட்டங்கள் பெற்றும் வருகின்றன. இதில் பகடி செய்வதற்கு என்ன இருக்கிறது என்று விளங்கவில்லை!

2. சில சமயங்களில், பகடியை மாற்றுக் கருத்துக்களை வெளியிட ஒரு ஆரோக்கியமான வழியாகப் பயன்படுத்துவதில் தவறில்லை. அதைப் பலரும் ரசிக்கவே செய்கின்றனர். அதே நேரத்தில், வலைப்பதிவுக் களத்தை பிறரை பகடி செய்வதற்கு மட்டுமே பயன்படுத்துவது, பல நேரங்களில் காழ்ப்பை வளர்ப்பதற்கு மட்டுமே அடி கோலுவதாய் அமைந்து விடுகிறது.

3. காசி தமிழ்மணச் சேவையின் முதலாண்டு நிறைவின் போது இட்ட பதிவிலேயே மதத்துவேஷம் மற்றும் இன்னபிற விரும்பத்தகாத விடயங்களைத் தாங்கி வரும் பதிவுகளை விலக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாகக் கூறியிருந்தார். அந்த நிலைக்குத் தன்னை தள்ள வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனால், தொடர்ந்து அவ்வாறே எழுதி வருபவர்கள் தங்கள் பதிவுகள் தமிழ்மணத்திலிருந்து விலக்கப்படக் கூடிய சாத்தியம் இருந்ததை உணர்ந்திருக்க வேண்டும்.

4. பலருக்கு, பணி, குடும்பம் ஆகியவற்றுக்கே நேரம் போதாமல் இருக்கும் சூழலில், தனியொரு மனிதனாக, தமிழ் வலைப்பதிவுகளை ஒருங்கிணைக்க தமிழ்மணத்தை உருவாக்கிய காசியின் சேவை மனப்பாங்கையும், உழைப்பையும் மனதில் கொண்டாவது, இம்மாதிரி பொதுவில் அவருக்கு கசையடிகள் வழங்குவதை தவிர்க்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து! "நாங்கள் என்ன, தமிழ்மணத்தை உருவாக்க பொருளுதவி கேட்டிருந்தால் தந்திருக்க மாட்டோமா?" என்று வினாவெழுப்புவது சற்றும் சரியல்ல! பொருளுதவி கொடுத்தாலும், ஒருவர் அதில் முனைய வேண்டாமா ?

5. தமிழ்மணத்திலிருந்து விலக்கப்பட்ட வலைப்பதிவுகளுக்குச் சொந்தக்காரர்கள், விடயத்தை பொதுவில் வைப்பதற்கு முன், தனிப்பட்ட முறையில் காசியை அணுகி, காரணங்களைக் கேட்டு, சர்ச்சைக்குரிய பதிவுகளை தாமாகவே நீக்க முன் வந்திருந்தால், பிரச்சினையை சுமுகமான முடிவுக்கு எடுத்து வந்திருக்கக் கூடிய சாத்தியம் இருந்ததாகவேத் தோன்றுகிறது. ஒரு விதயத்தை ஊதிப் பெரிதாக்குவது என்பது இங்கு நடைமுறையாகவே இருந்து வருகிறது!

6. இதைத் தணிக்கை என்று எண்ணுவதை விட, சக வலைப்பதிவரின் மனம் புண்படும்படியும், தேவையற்ற சர்ச்சையை வளர்க்கும் வகையிலும் எழுதாமல் இருப்பதன் அவசியத்தை வலியுறுத்துவதாக நினைத்தால், அனைவருக்கும் நல்லது. முக்கியமாக, சின்னவன், இணையக்குசும்பன் பதிவுகள் நீக்கப்பட வேண்டிய சூழல் உருவானது குறித்து இங்கே யாருக்கும் மகிழ்ச்சி இல்லை!!! பதிவுகள் விலக்கப்பட வேண்டிய காரணங்களை ஆராயும் வழிவகைகள் குறித்து என் கருத்துக்களை முன் வைப்பதை, தற்போதைய சூழலில், தவிர்க்கிறேன்!

7. இறுதியாக, தமிழ்மணம் வாயிலாகத் தான், பல சாதாரணர்களின் (என்னையும் சேர்த்து) பதிவுகள் கவனிக்கப் படுகின்றன, வாசிக்கப் படுகின்றன என்பதை பலரும் ஒப்புக் கொள்வர். ஏன், தமிழ்மணம் மூலமாகத் தான் கௌசல்யா என்ற ஏழை மாணவியின் கல்விக்கு (சக வலைப்பதிவரின் ஆதரவோடு) உதவ வேண்டும் என்ற எங்கள் நோக்கத்தின் முதல் கட்டம் நிறைவேறியது!

என்றென்றும் அன்புடன்
பாலா

Wednesday, October 12, 2005

சென்னைப் பெருமழையும் நெகிழ்ச்சியானதொரு சந்திப்பும்

எனது பிரமிக்க வைக்கும் கௌசல்யா பதிவின் இறுதியில் வைக்கப்பட்டிருந்த (கௌசல்யாவின் மருத்துவக்கல்வி உதவிக்கான) கோரிக்கையைத் தொடர்ந்து பல வலைப்பதிவு நண்பர்கள் பணவுதவி செய்தனர். கிட்டத்தட்ட 30,000க்கு மேலான ஒரு தொகை திரண்டது. அதிலிருந்து ரூபாய் இருபத்தைந்து ஆயிரத்தை கௌசல்யாவிடம் சேர்ப்பிக்கவும், மீதித் தொகையை மற்றொரு ஏழை மாணவிக்குத் தரவும் நண்பர்களின் ஒப்புதலுடன் முடிவெடுக்கப்பட்டது.

கௌசல்யா குறித்து முதலில் செய்தி வெளியிட்ட DECCAN CHRONICLE(DC) அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு, அந்த நாளிதழின் Chief of News Bureau, பகவன் சிங் அவர்களிடம் கௌசல்யாவை சந்தித்துப் பேசவும், திரட்டியத் தொகையை வழங்கவும் ஏற்பாடு செய்யுமாறு விண்ணப்பித்தேன். சற்று நீண்ட காத்திருப்பிற்குப் பின் பகவன் அவர்கள் அந்தச் சந்திப்பை இன்று மதியம் 3 மணி அளவில் ஏற்பாடு செய்திருந்தார். சரியான மழை நாளில் அது அமைந்து விட்டது! திரு.டோண்டு ராகவனையும், ரஜினி ராம்கியையும் DC அலுவலக சந்திப்புக்கு வருமாறு அழைத்திருந்தேன்.

வீட்டிலிருந்து கிளம்பும்போது ஓரளவு மழை பெய்து கொண்டிருந்தது. என் மனைவிக்கு நங்கநல்லூர் செல்ல வேண்டிய வேலை இருந்ததால், கால் டேக்ஸி எடுத்துக் கொண்டு, போகும் வழியில் கத்திப்பாரா சந்திப்பில் என்னை இறக்கி விட்டுப் போகுமாறு கூறினேன். கத்திப்பாராவை நெருங்கும்போது வானம் மடை திறந்தாற் போல் மழை பெய்யத் தொடங்கியது! ஒழுங்கு மரியாதையாக DC அலுவலக வாசலில் இறங்கிக் கொள்ளாமல், "நான் பார்த்துக் கொள்கிறேன். நீ கிளம்பு!" என்று (DC அலுவலகம் அருகில் இருப்பதாக எண்ணிக் கொண்டு) மனைவியிடம் ஜவடாலாகக் கூறிவிட்டு கத்திப்பாராவில் இறங்கி விட்டேன்!

நூறடி சாலையில் மழைக்கு ஒதுங்கக் கூட இடமில்லாமல், சுமார் ஒன்றரை கி.மீ நடந்து DC அலுவலகம் போய்ச் சேர்வதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது! அதுவும் DC அலுவலகம் அமைந்த தெரு, முழுதும் சேறும் சகதியுமாக இருந்தது! அலுவலகம் உள்ளே சென்றவுடன், உள்ளுக்கும் வெளிக்கும் ஆன சூழல்களில் இருந்த வித்தியாசம், முகத்தில் அறைந்து வரவேற்றது!!! அவ்வளவு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட கட்டடம் அது!

பகவன் சிங் அவர்களின் அறையில் அவருக்காகக் காத்திருந்தபோது டோண்டு ராகவன் வந்து சேர்ந்தார். ராம்கியால் வர இயலவில்லை. பகவன் சிறிது நேரத்தில் வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். மனிதர் மிக எளிமையாகவும், நட்பு பாராட்டுபவராகவும் இருந்தார். அவர் பெயர் வடக்கத்தித்தனமாக இருந்தாலும் பகவன் நல்ல தமிழில் பேசியது மனநிறைவாக இருந்தது. மழை காரணமாக கௌசல்யா வந்து சேர சற்று தாமதம் ஆனது. நானும், ராகவனும், பகவன் அவர்களும் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தோம்.

தமிழ் வலைப்பதிவுகள், தமிழில் பதிக்கத் தேவையான மென்பொருட்கள், தமிழ்மணம் சேவை ஆகியவை குறித்து பகவன் அவர்களிடம் எடுத்துக் கூறினோம். அவற்றை பொறுமையாகக் கேட்டுக் கொண்ட அவருக்கு, தமிழ்மணம் வெப்சைட்டை அவரது கணினியில் திறந்து காண்பித்தேன். பகவன் தன் கீழே பணி புரியும் பத்திரிகையாளர் ஒருவரை அழைத்து தமிழ் வலைப்பதிவுகள் குறித்து கட்டுரை ஒன்றை தயாரித்து DCயில் வெளியிட ஆவன செய்யுமாறு கூறினார்! அதற்கு வேண்டிய உதவி செய்யுமாறு எங்களையும் கேட்டுக் கொண்டார்.

தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் கூறியபடி, நாங்கள் பேசுவதையும் செவிமடுத்தபடி, கணினியில் ஒரு கட்டுரையை தட்டச்சும் செயதபடி, சக பணியாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கியபடி, (இவற்றுக்கு இடையில் எங்களுக்கு காபி வரவழைத்துத் தந்து!) பகவன் சிங் இயங்கியதைக் காண சற்று பிரமிப்பாகவே இருந்தது!!!

ஒரு வழியாக கௌசல்யா DC அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தார். அவரை சந்தித்து நானும் ராகவனும் பேசினோம். First Impression is always the Best Impression என்பதற்கு ஏற்றாற் போல நற்குணமும் கல்வியார்வமும் மிக்கவராக கௌசல்யா தோற்றமளித்தார்! 12-வது வகுப்பு பொதுத் தேர்வில் இயற்பியல் (199/200) தவிர கணிதம், வேதியியல், உயிரியல் பாடங்களில் 200/200 வாங்கிய, பொது நுழைவுத் தேர்வில் 98.33% பெற்ற, தாய் தந்தையற்ற அப்பெண்ணுக்கு, நமது தமிழ் வலைப்பதிவர்கள் சார்பில் உதவ முடிந்தது குறித்து மிகுந்த மனநிறைவு எனக்கு! அத்தகைய மதிப்பெண்கள் பெற எத்தகைய அசாதாரண உழைப்பு தேவை என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை!

ஒரு வருடத்திற்கு படிப்பு மற்றும் இதரச் செலவுகளுக்கு சுமார் 40000/- தேவையிருப்பதாகக் கௌசல்யா கூறினார். ரூபாய் 25000-க்கான காசோலையை அவரிடம் கொடுத்து, அடுத்த வருடமும் அவரது படிப்புக்கு இயன்ற அளவு உதவி செய்ய முயற்சிப்பதாகக் கூறி விடை பெற்றோம். DC பத்திரிகை சார்பிலும் கௌசல்யாவுக்கு உதவி அளிக்கப்படுவதாக அறிந்தேன்.

பின்னர், DC அலுவலக வாசலிலிருந்து நூறடி சாலை வரை தேங்கியிருந்த குட்டையில் (செருப்பை கையில் பிடித்துக் கொண்டு!) நீந்தியபடி நானும் ராகவனும் ஒரு வழியாக கிண்டியை அடைந்தோம்! மழை பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தது! சொட்ட சொட்ட மழையில் நனைவது கூட, உள்ளம் நிறைவாக இருக்கும்போது, மிகுந்த ஆனந்தமாகவே உள்ளது!!!

உதவிய நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்! கௌசல்யாவின் மருத்துவப் படிப்பு முடியும் வரை, அவருக்கு (இயன்ற அளவில்) உதவலாம் என்பது என் எண்ணம். அதற்கு உங்கள் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.

என்றென்றும் அன்புடன்
பாலா

Thursday, September 22, 2005

BCCI கலாட்டா !

நடக்கவிருக்கும் BCCI பதவிகளுக்கான "ஜனநாயக" போட்டி குறித்தும், அது சம்மந்தப்பட்ட நீதிமன்ற உத்தரவுகள் குறித்தும், சம்மந்தப்பட்டவர்களின் அறிக்கைகள் குறித்தும், ஊடகங்கள் இந்த விடயத்தை ஊதிப் பெரிதாக்குவது குறித்தும் தொடர்பாக நடந்தேறி வரும் கூத்துகள் பொதுவாக ரசிக்கும்படியாக இருந்தாலும், இவற்றிலிருந்து ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது!

டால்மியா, IS.பிந்த்ரா, பவார், ·பரூக் அப்துல்லா, துங்காப்பூர், மகேந்திரா மற்றும் அவர்களுக்கிடையே நடக்கும் power struggle-ஐ வரிந்து கட்டி பதிவு செய்யும் ஊடகவியலாளர்கள் ஆகிய யாருமே பெரிய யோக்கிய சிகாமணிகள் கிடையாது. அவரவருக்கு இதனால் அவர்களுக்குக் கிடைக்கும் / கிடைக்கப்போகும் ஆதாயமே பிரதானம் !

இவற்றையெல்லாம், ஈ போவது தெரியாமல் வாயைப் பிளந்து 'ஆ'வென்று பார்த்துக் கொண்டிருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் தான் சூப்பர் கோமாளிகள்! இவர்கள் இப்போதைக்கு திருந்தப் போவதும் இல்லை! உடனே பாயாதீர்கள்! என்னையும் சேர்த்துத் தான் சொல்கிறேன் :-)

என்றென்றும் அன்புடன்
பாலா

*165*

Wednesday, September 21, 2005

'சுயநலக் கபடதாரி' Sourav Ganguly

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கிரெக் சாப்பல் அணி ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு யோசனையாக (கங்குலி தலைமைப் பதவியிலிருந்து விலகலாம்) முன் வைத்த ஒரு விடயத்தை ஊடகங்களில் சமயம் பார்த்து (தான் சதம் அடித்த அன்று) கசிய விட்டு, கங்குலி செய்த மட்டமான அரசியல், அவரது சுயநலத்தையும், பல நாட்களாக அவர் அரங்கேற்றி வந்த "அணி ஒற்றுமை" நாடகத்தையும் அம்பலப்படுத்தியுள்ளது.

நடந்தேறியுள்ள இந்த கசப்பான நிகழ்வினால், ராகுல் டிராவிடின் பக்குவமும், உயர்ந்த குணமும் மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்திற்கு முன் நடைபெற்ற இந்த அணி ஆலோசனைக் கூட்டத்தில், டிராவிட் தன் கேப்டனுக்கு ஆதரவாக நின்றது, அவர் எத்தகைய Team man என்பதையும் பறைசாற்றுகிறது! அதே நேரம், சென்னையிலுள்ள ஒரு முதல் டிவிஷன் கிளப் அணிக்கு ஒப்பான ஜிம்பாப்வே அணிக்கு எதிராக, ஓர் இலகுவான ஆடுகளத்தில், 262 பந்துகளை விழுங்கி கங்குலி எடுத்த சதமே, அவரது ஹிமாலய சுயநலத்திற்கு சான்று !!!

இந்த விடயம் பூதாகரமாக உருவெடுக்காததற்கு முக்கியக் காரணம், பத்திரிகையாளர்களை சந்தித்த சாப்பல் தன் பங்குக்கு கங்குலிக்கு எதிராக எதையும் கூறாதது தான். மேற்கு வங்காளத்தில் தனக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தையும், ஆர்ப்பாட்டமான ஆதரவையும் கண்டு, கங்குலி தன்னை உண்மையிலேயே ஒரு மகாராஜாவாக கற்பனை செய்து கொள்வதால் விளைந்த அகந்தையும், ஆணவமும் தான், கங்குலியின் இத்தகைய செயல்பாடுகளுக்கு ஆதாரமானவை! BCCI-ஐ ஒரு மா·பியா கூட்டம் போல் ஆக்கிய டால்மியாவின் ஆதரவும், கங்குலி மீண்டும் கேப்டன் பதவியைப் பெற பெரிதும் உதவியது!

2007-இல் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை போட்டிக்கு ஒரு பலமான இந்திய அணியை உருவாக்குவதற்கு (கங்குலி கேப்டனாக இருப்பதை காட்டிலும்!) சாப்பல் அணியின் பயிற்சியாளராக நீடிக்க வேண்டியதன் அவசியத்தை பலரும் ஒப்புக் கொள்வர். இதுவரை தான் ஈட்டிய (ஓரளவு) பேருக்கும், புகழுக்கும் பங்கம் ஏற்படாமல் இருக்கவும், அணியின் நலன் கருதியும், தலைமைப் பொறுப்பிலிருந்து தானே விலக முடிவெடுப்பது தான் கங்குலிக்கு சிறந்தது, நல்லது. ஆனால், அவரது இயல்பு அதை அனுமதிக்காது!

ஒரு கேப்டனாக / மட்டையாளராக இந்திய கிரிக்கெட்டில் கங்குலிக்கான இடத்தை யாரும் மறுக்க முடியாது. அதே சமயத்தில், அவர் தன் கிரிக்கெட் வாழ்வின் கடைசி அத்தியாயத்தில் உள்ளார் என்பதும் கண்கூடு! வரவிருக்கும் 2007- உலகக்கோப்பையை மனதில் கொண்டு, டிராவிட்டை கேப்டனாகக் கொண்ட ஒரு சிறந்த அணியை உருவாக்குவதே, தற்போது BCCI-யின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.

என்றென்றும் அன்புடன்
பாலா

*164*

Tuesday, September 20, 2005

SELF CENTRED கோலிவுட் கதாநாயகர்கள்

தமிழோவியத்தில் பதிப்பிக்கப்பட்டது

கடந்த 15 வருடங்களைத் தவிர்த்து தமிழ்த் திரையுலகில் பிரபலமான கதாநாயகர்கள் இணைந்து நடிப்பதென்பது இயல்பான ஒன்றாகவே இருந்தது. இதில் எம்ஜியாரையும் சிவாஜியையும் விட்டு விடலாம் !

கமலும் ரஜினியும் இணைந்து பல நல்ல திரைப்படங்களில் நடித்தனர். நினைத்தாலே இனிக்கும், இளமை ஊஞ்சலாடுகிறது, மூன்று முடிச்சு, அவர்கள் என்று பல திரைப்படங்களை சுட்டிக் காட்டலாம். இம்மாதிரி இரு வித்தியாசமான நடிகர்கள் இணைவது சாத்தியப்படும்போது, கதாசிரியர் நல்ல கதைக்களனை உருவாக்க வாய்ப்பு கிடைக்கிறது.

தற்போது வெளிவரும் பல திரைப்படங்கள், அவற்றில் நடிக்கும் கதாநாயகருக்காக உருவாக்கப்பட்டு, நாலு பாட்டு, நாலு ·பைட், ஒரு அயிட்டம் டான்ஸ் (வட இந்திய இறக்குமதி பெரும்பாலும்!), வெறுப்பேத்தும் நகைச்சுவை, அலுப்பூட்டும் வில்லத்தனம் என்கிற கட்டுக்குள் அடங்கி விடுகிறது. இத்தகைய சூழலில், நல்ல கதையம்சம் இல்லாத படங்களில் உணர்வுகளை வெளிப்படுத்தி நடிக்க ஏது வாய்ப்பு ? சங்கர், பாலா (என்றென்றும் அன்புடன் அல்ல!), மணிரத்னம் போன்ற இயக்குனர்களிடமிருந்து வித்தியாசமான கதையுடன் கூடிய நல்ல படங்கள், சில சமயம் நமக்குக் கிடைக்கின்றன.

அக்காலத்தில், பிரபல நாயகர்கள் இணைந்து நடிக்க வேண்டியிருந்தது கண்டு அஞ்சாமல், போட்டி போட்டு நடித்து அவரவர் முத்திரையை பதித்தனர். ஆரோக்கியமான போட்டி இருந்தது. ஆனால், ஈகோ அவ்வளவாக இல்லை எனக் கூறலாம். இப்போது இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்து விட்டால் (அதில் ஒன்று சுமாராக ஓடியும் விட்டால்!) அந்த நடிகர் யாருடனும் சேர்ந்து நடிக்க மாட்டார் !!! அவருக்கேத்த கதையை உற்பத்தி செய்ய வல்ல இயக்குனருக்காக அலைய ஆரம்பிப்பார் !

உதாரணத்துக்கு, சிம்புவையும், தனுஷையும் (அல்லது விஜயையும், அஜித்தையும்) எடுத்துக் கொள்ளலாம். இவர்கள் இணைந்து நடிப்பதென்பது சாத்தியமே இல்லாத ஒன்றல்லவா ? வித்தியாசமான நடிகர்கள் இணையும்போது, நல்லதோர் கதைக்களன் அமைவதும், நல்ல திரைப்படங்கள் வெளிவருவதும் சாத்தியமாகின்றன. இப்போதிருக்கும் நாயகர்கள் தனித்தனி தீவுகளாக உலா வருகிறார்கள். அதனாலேயே, அவர்களிடமிருந்து ஒரே மாதிரியான (STEREOTYPE) படங்களை மட்டுமே எதிர்பார்க்க முடியும் !

ரஜினியும் சிவகுமாரும் சேர்ந்ததால் தான், 'புவனா ஒரு கேள்விக்குறி' என்ற வித்தியாசமான திரைப்படம் கிடைத்தது ! கமலும் ரஜினியும் இணைந்ததால் தான், ஒரு 'அவர்கள்' உருவானது ! சிவாஜியும் கமலும் சேர்ந்ததால், ஒரு 'தேவர் மகன்', சிவாஜியும் ஜெமினியும் இணைந்ததால் ஒரு 'பாசமலர்', முத்துராமனும் ரவிச்சந்திரனும் இணைந்ததால் ஒரு 'காதலிக்க நேரமில்லை', கார்த்திக்கும் பிரபுவும் சேர்ந்ததால் ஒரு 'அக்னி நட்சத்திரம்' என்று பலவற்றைக் கூறலாம் !

அப்போதெல்லாம் சிவாஜி, SSR, பாலாஜி, ஜெமினி, முத்துராமன், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், சிவகுமார் என பலரும் ஒருவருடன் ஒருவர் இணைந்து பல தரமான படங்களை தந்துள்ளனர். அதோடு இக்காலத்தில், ரங்காராவ், சுப்பையா, நாகையா, பாலையா, மேஜர் சுந்தரராஜன், நாகேஷ் போல குணச்சித்திர நடிப்பில் தனித்துவத்தோடு பரிமளிக்கும் நடிகர்கள் ஓரிருவரே உள்ளனர் என்பதும் பெருங்குறையே !!!

ஹிந்தி திரைப்படங்களில் பிரபல நடிகர்கள் சேர்ந்து நடிப்பது ஒரு சாதாரண நிகழ்வாகவே இருந்து வந்திருக்கிறது. இதற்கு இரு காரணங்களைக் கூறலாம். ஒன்று, இயக்குனர்களுக்கு அங்கு நல்ல மதிப்பு எப்போதும் உள்ளது. இரண்டு, பாலிவுட் நடிகர்கள் தங்களை தனித் தீவுகளாக எண்ணிக் கொள்வதில்லை. அந்தக்கால ராஜ்கபூர், ராஜேந்திரகுமார், சுனில்தத், திலீப்குமார், பால்ராஜ் சஹானி, கிஷோர்குமார் முதல், அடுத்து வந்த சஞ்சீவ்குமார், தர்மேந்திரா, அமிதாப், ராஜேஷ்கன்னா, வினோத்கன்னா, சசிகபூர் ஆகியோரும், அதன் பின்னர் வந்த ரிஷிகபூர், அனில்கபூர், ஜாக்கிஷ்ரா·ப், நசுருதீன் ஷா, நானாபடேகர், சன்னிதியோல், சஞ்சய்தத் ஆகியோரும், தொடர்ந்து வந்த அமீர்கான், சல்மான்கான், ஷாருக், அக்ஷய்குமார், அஜய் தேவ்கன் ஆகியோரும், இன்றைய இளம் நாயகர்களான பாபிதியோல், ரித்திக்ரோஷன், விவேக்ஓபராய் வரை, அந்தந்த கால கட்டங்களில் இணைந்து நடித்து பல வெற்றிப் படங்கள் வெளி வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கமல் ரஜினியை விடுத்து, சரத்குமார், விஜயகாந்த், கார்த்திக், பிரபு, சத்யராஜ், பார்த்திபன், விக்ரம், அர்ஜுன், விஜய், அஜித், சூர்யா, பிரசாந்த், சிம்பு, தனுஷ் என்று பலரும் இணைந்து நடிக்கத்தக்க சூழலை வரவேற்க வேண்டும், உருவாக்க வேண்டும் ! இல்லையென்றால், கிராமத்து 'ஐயா' சரத்குமார், அனல் வசன 'கேப்டன்' விஜயகாந்த், கோபக்கார அஜித், காதலில் மென்மையும், சண்டையில் ஆண்மையும் காட்டும் விஜய், அடிதடி அர்ஜுன், நக்கல்/காமெடி சத்யராஜ், எகத்தாள சிம்பு, பரிதாப தனுஷ் நடிக்கும் படங்களைப் பார்த்து அலுத்து நம் வாழ்க்கை முடிந்து விடும் ! தமிழ்த் திரைப்படச் சூழலிலும் முன்னேற்றம் ஏற்படாது !

இப்போதைய நடிகர்களில், விக்ரம், கமல் மட்டுமே வித்தியாசமான கதாபாத்திரங்களுக்கு தங்கள் நடிப்பால் மெருகூட்ட சிரத்தை எடுக்கின்றனர். யோசித்துப் பார்த்தால், ஒரு இந்தியனும், ஒரு சேதுவும், ஒரு அன்பே சிவமும், ஒரு பிதாமகனும் கோலிவுட்டில் எடுக்கப்பட்டவை தான் !!! என்ன, இவற்றுக்கு இடையில் தயாரிக்கப்படும் குப்பைகள் ஏராளம் !!! அது தான் பிரச்சினையே !

என்றென்றும் அன்புடன்
பாலா

Monday, September 19, 2005

ஒரே கேள்வி --- ஒரே பதில்

கேள்வி: அரசியல், சினிமா இவ்விரு துறைகளிலும் வாரிசுகள் ஆதிக்கம் செலுத்துவதைப் போல் இலக்கியத் துறையில் இவ்வித ஆதிக்கம் காணப்படவில்லையே, ஏன் ?

--- அ.அப்துல் காதர், விளாத்திகுளம்

மதனின் பதில்: அரசியல் வாரிசுக்கு எந்தத் தகுதியும் தேவையில்லை. வெறுமனே வாரிசாகப் பிறந்தாலே போதும் ! சினிமாவில் கொஞ்சூண்டு நடிப்பு, டான்ஸ், சண்டைப் பயிற்சி மட்டுமே தேவைப்படும். பிறகு அப்பாவே மகனை நடிக்க வைத்து ஒரு மாதிரி ஒப்பேத்தி விடுவார் ! இலக்கியத்தில் இது எதுவுமே நடக்காது. யாருமே உங்களுக்கு உதவ முடியாது. சுருக்கமாக, இலக்கியத்துக்கு சுயமாகக் கற்பனை செய்தே தீர வேண்டும்.

டென்ஷனைக் குறைக்க ஒரு ஜோக் :)

பெண் 1: சாட்டிங் மூலமா ஏமாத்திப் பணம் பறிக்கலாம்னு பார்த்தா, அவன் பயங்கர கில்லாடியா இருப்பான் போலிருக்கு!

பெண் 2: எப்படிச் சொக்றே ?

பெண் 1: என் படம்னு ஜோதிகா படத்தை அனுப்பி ஏமாத்த நினைச்சேன் ... அவன் சூர்யா படத்தை அனுப்பறான் !

--- இலவை ஜோகா

நன்றி: ஆனந்த விகடன்

*162*

Thursday, September 15, 2005

கார்ப்பரேட் மேலாண்மைப் பாடங்கள்

பாடம் - 1
**************

ஒரு காகம் ஒரு மரத்தின் கிளையில், ஒரு வேலையும் செய்யாமல் அமர்ந்திருந்தது. அந்த வழியாக வந்த சிறுமுயல் ஒன்று காகத்தைப் பார்த்து, "நானும் உன்னைப் போலவே ஒரு வேலையும் செய்யாமல் ஒய்வெடுக்கலாமா ?" என்றது, அதற்கு காகம், "ஓ, தாராளமாகச் செய்யலாமே !" என்று பதிலுரைத்தது ! சிறுமுயலும் மரத்தின் கீழ் அமர்ந்து ஓய்வெடுக்கத் தொடங்கியது. அங்கு திடீரென்று தோன்றிய நரி, முயல் மீது பாய்ந்து அதை கொன்று தின்று விட்டது !!!

Image hosted by Photobucket.com

நீதி: ஒரு வேலையும் செய்யாமல் அமர்ந்திருக்க வேண்டுமென்றால், நீங்கள் மிக உயரத்தில் அமர்ந்திருத்தலே நலம் !!!




பாடம் - 2
**************

ஒரு கோழியும், எருதும் உரையாடிக் கொண்டிருந்தன.

கோழி: எனக்கு அந்த மரத்தின் உச்சிக்கு செல்ல ஆசை. ஆனால், அதற்கு வேண்டிய உடற்திடம் என்னிடம் இல்லை !
எருது: என்னுடைய சாணத்தை கொஞ்சம் தின்று பார் ! ஏனெனில், அதில் பல சத்துக்கள் உள்ளன.

Image hosted by Photobucket.com

முதல் நாள் கொஞ்சம் சாணத்தை உண்ட கோழிக்கு மரத்தின் முதல் கிளை வரை ஏற முடிந்தது. அடுத்த நாள் கோழி இன்னும் சிறிது சாணம் தின்று இரண்டாவது கிளை வரை ஏறியது. இது போல் சிறிது சிறிதாக சாணம் தின்று, பத்து நாட்களில், கோழி மரத்தின் உச்சிக்கு ஏறி, மிக்க பெருமையுடன் அமர்ந்திருந்தது !!! அந்த வழியாக வந்த குடியானவன் ஒருவன், மரத்தின் உச்சியில் இருந்த கோழியைக் கண்டவுடன், உணவுக்காக அதை சுட்டு வீழ்த்தினான் !!!

Image hosted by Photobucket.com

நீதி: எருதுச்சாணம் (BULLSHIT) உங்களை உயரத்திற்கு இட்டுச் செல்லலாம் ! ஆனால், உயரத்திலேயே நிலை கொள்வதற்கு அது ஒருபோதும் உதவாது !!!


"உயரத்திற்குச் செல்ல விரும்பாத"
என்றென்றும் அன்புடன்
பாலா




Wednesday, September 14, 2005

கேப்டன் VS கேப்டன்

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கங்குலி மற்றும் இன்று புதுக் கட்சி (தேசிய முற்போக்கு திராவிட கழகம்) தொடங்கிய "கேப்டன்" விஜயகாந்த் ஆகிய இருவரை குறித்து ஓர் ஒப்பு நோக்கு பார்வை :-)
********************************

1. கங்குலி தனது இன்னிங்க்ஸை 9 வருடங்களுக்கு முன் இங்கிலாந்தில் (முதல் ஆட்டத்திலேயே சதத்துடன்) தொடங்கினார். தற்போது அது முடிவடையும் நிலையில் உள்ளது போல் தெரிகிறது !!! நமது கேப்டன் தனது அரசியல் இன்னிங்க்ஸை இன்று மதுரையில் பிரம்மாண்டமாகத் தொடங்கியிருக்கிறார்.

2. ஒருவர் "கறுப்பு" எம்ஜியார், மற்றவர் "வெள்ளை" மகாராஜா !

3. நமது விஜி மதுரையை (தமிழ்நாட்டை ?) 'மீட்க வந்த சுந்தர பாண்டியன்' ! கங்குலியோ "பிரின்ஸ் OF கல்குத்தா" (பாய்காட் கூற்றின் படி!)

4.. கங்குலி இந்திய கிரிக்கெட்டில் புது ரத்தத்தையும், உத்வேகத்தையும் புகுத்தி ஓரளவு வெற்றி கண்டவர். நமது "கேப்டனின்" செயல்பாடுகள், நடவடிக்கைகள், அரசியல் வளர்ச்சி ... பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

5. கங்குலி இந்திய கிரிக்கெட் வட்டார "அரசியலில்" தாதா !! "கேப்டன்" விஜயகாந்த் பொது அரசியலில் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறார்.

6. கங்குலியின் தளபதியாக, திறமை மிக்க, அமைதியான (பதவி வெறி இல்லாத) ராகுல் திராவிட் இருப்பது அவரது மிகப்பெரிய பலம் என்று கூறலாம். கேப்டனின் தளபதியாக அவரது மனைவி உள்ளது விஜயகாந்தின் அரசியல் வெற்றிக்கு (அல்லது தோல்விக்கு!) எந்த அளவுக்கு காரணமாக அமையப் போகிறது என்பதற்கு காலம் பதில் சொல்லும்.

7. கங்குலி ஒரு ஸ்டைலிஷ், 'டைமிங்' மீது நம்பிக்கை கொண்ட ஒரு அருமையான ஆட்டக்காரர். விஜயகாந்த் திரைப்பட சண்டைக் காட்சிகளில் ஸ்டைலாக பாய்ந்து திரும்பி "BACK KICK" பிரயோகம் வாயிலாக வில்லன்களை பந்தாடுவதில் வல்லவர் !!!

8. இரு கேப்டன்களுமே தங்களது 'வாய்' மீது (கங்குலி பேட்டிகளிலும், விஜய்காந்த் தனது அனல் கக்கும் திரைப்பட வசனங்களிலும்!) அதிகம் நம்பிக்கை உடையவர்கள், அதனால் அதை அதிகம் பயன் "படுத்துபவர்கள்" !!!

9. இருவரிடமும் "LEADERSHIP" குணங்கள் இயல்பாகவே அமைந்துள்ளன. இருவருமே மிகுந்த தன்னம்பிக்கை உடையவர்கள். இருவருமே கடின உழைப்பால் முன்னுக்கு வந்தவர்கள்.

10. கங்குலி-நக்மா தொடர்பு, விஜயகாந்த்-ராதிகா தொடர்பு --- இரண்டுமே பரபரப்பாக பேசப்பட்டு, பின்னர் ஓய்ந்து போன விடயங்கள் ஆயின !!!

11. கங்குலி வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் 'உயர' பந்துகளை எதிர்கொள்ள மிகவும் திணறுவார். நமது கேப்டனோ அரசியலில் தனக்கு யாரிடமும் பயமில்லை என்று கூறி வருகிறார் !!! பார்க்கலாம் !

12. இறுதியாக, கங்குலி மைதானத்திற்கு வெளியே (விளம்பரங்களில் !) நடிக்கிறார். "கேப்டன்" விஜயகாந்த் திரைப்படங்களுக்கு வெளியே "நடிக்க" மாட்டார் என்றே தோன்றுகிறது !!!

*********************************

Sunday, September 04, 2005

சூப்பர் ஸ்டார் --- 2 செய்திகள்

இந்த வார ஆனந்த விகடனில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் பாலிவுட்டில் ஸ்பீல்பர்க்-க்கு இணையாகக் கருதப்படும் ராம் கோபால் வர்மா ஆகியோரின் பேட்டிகள் வெளி வந்துள்ளன.

1. அமிதாப் தன் பேட்டியில், நம் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கவிருக்கும் சிவாஜி திரைப்படத்தில் தனக்கு ஒரு வேடம் தருமாறு தன் நீண்ட நாள் நண்பரான ரஜினியை கேட்டுக் கொண்டிருக்கிறார் ! அவர் கூறியிருப்பதாவது:
"ரஜினி சாப் ! உங்களோடு நடிச்சு ரொம்ப வருஷமாச்சு. புதுப்படத்தில் எனக்கு ஒரு சான்ஸ் கிடைக்குமா ? அட்லீஸ்ட் ஒரு சின்ன ரோலாவது கொடுங்களேன், ப்ளீஸ் !"

2. அடுத்து வர்மா ரஜினியைப் பற்றி, "இன்றைய இந்திய சினிமாவில் அவர் தான் ரியல் ஹீரோ! வெறுமனே திரையில் ரஜினி தோன்றினாலே அப்படி ஒரு காந்த சக்தி அவருக்கு இருக்கிறது. ஷார்ப்பான பாடி லாங்குவேஜ் ! .... சின்னப்பிள்ளைகள் வரை ரசிகர்களைச் சேர்த்து வைத்திருக்கிறாரே, சிம்ப்ளி கிரேட் ! .... அவரை வைத்து ஒரு படம் பண்ண வேண்டும். அது தான் என் பர்சனல் விருப்பம்!" என்று வியப்பில் ஆழ்ந்து பாராட்டுகிறார்.

அது தான் 'ரஜினி' என்னும் PERENNIAL மேஜிக் !!! மேலும், பாலிவுட்டின் ஜாம்பவன்களான இவ்விருவரும் போல பலரும் தென்னக சூப்பர் ஸ்டார் மீது வைத்திருக்கும் மதிப்புக்குக் காரணம், அவரிடம் காணப்படும் எளிமையும், இனிமையாகப் பழகி நட்பு பாராட்டும் பாங்கும், கர்வமின்மையும், தன்னடக்கமும் தான் !!! 'சிவாஜி'யில் AVM, ரஜினி, சங்கர், ரஹ்மான் ஆகிய நால்வர் கூட்டணி அமைய இருப்பதால், அத்திரைப்படம் இந்திய திரைப்பட வரலாற்றில் (in all aspects) ஒரு மாபெரும் மைல் கல்லாக அமையும் என்பதில் ஐயமில்லை !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

நன்றி: ஆனந்த விகடன்

பி.கு: திட்டுவதற்கென்றே வருகை தந்திருக்கும் (சில!) கனவான்களே, (நாவடக்கமா) திட்டி விட்டுப் போங்க, ஏனெனில், "யாகாவாராயினும் நாகாக்க, காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு" என்று வள்ளுவம் கூறுகிறது ;-)

Friday, August 26, 2005

கௌசல்யாவுக்கு திரட்டிய உதவித் தொகை

***********************************************
எனது பிரமிக்க வைக்கும் கௌசல்யா பதிவையும் அதன் தொடர்ச்சியான மற்றொரு பதிவையும் நீங்கள் படித்திருக்கலாம். அவற்றைப் படித்த வலைப்பதிவு நண்பர்கள் சிலர் பண உதவி செய்துள்ளனர். மேலும் சிலர் உதவி செய்வதாகக் கூறியுள்ளனர்.

உங்கள் தகவலுக்காக, இது வரை கௌசல்யாவின் கல்வி உதவிக்காக திரட்டப்பட்ட மொத்தத் தொகை ரூபாய் 28,000/- இது தவிர துளசி அவர்கள் "பொது உதவி" நிதியாக ரூ.3800/- அனுப்பியுள்ளார். உதவிய நண்பர்கள் அனைவருக்கும், இவ்விஷயத்தில் உறுதுணையாக இருக்கும் ராம்கிக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் !!! உதவி செய்தவர்கள் பெயர்கள் பின் வருமாறு:

ரம்யா நாகேஷ்வரன், ஜெயஸ்ரீ, பரணி, முகமூடி, துளசி, சங்கரபாண்டி, இரா.முருகன், திருமலை, சலாவுதின் பஷீர், டோண்டு, எஸ்.சங்கர் மற்றும் குழலி. இவர்கள் தவிர்த்து, மேலும் இரு (பெயர் கூற விரும்பாத) வலைப்பதிவு நண்பர்களும் பணம் அனுப்பியுள்ளனர். யார் பெயராவது விடுபட்டிருந்தால், மன்னிக்கவும். எனக்கு தனிமடலிட்டால், பெயரை பட்டியலில் சேர்த்து விடுகிறேன்.

உதவி செய்ய விரும்பும் அன்பர்கள், மேலே சுட்டியுள்ள (கௌசல்யா பற்றிய) எனது முந்தைய இரு பதிவுகளை பார்க்கவும். அவற்றின் பின்னூட்ட களத்தில் பணம் அனுப்புவது குறித்த விவரம் தரப்பட்டுள்ளது. "பொது உதவி" நிதியாகவும் உங்களால் இயன்றதை வழங்கலாம். இன்னும் இரு வாரங்களுக்குள் உதவித் தொகையை கௌசல்யாவுக்கு வழங்குவதற்கான ஏற்பாட்டை நானும் ராம்கியும் செய்து வருகிறோம்.

என்றென்றும் அன்புடன்
பாலா

SHOT of the Day அல்லது நெத்தியடி !

**************************************
எனக்குத் தெரிந்த ஆசனம் --- சுஜாதா

சில தியான மையங்களில் 'குண்டலினி சக்தி' என்று கூறி நமது அடிவயிற்றிலிருந்து முதுகுத் தண்டு வழியாக மேலே பயணித்து நெற்றிக்கு வந்து ஒரு 'சூப்பர் பவராக' மாறும் என்கிறார்களே, அது எப்படி ? அது உண்மையா ?

--- ஆர்.பி.ராஜ்குமார், பரமக்குடி

சுஜாதா பதில் : இதைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. எதையாவது எழுதப் போய் உலகெங்கும் யோகா கிளாஸ் நடத்தி (ஜல்லியடித்துக்) கொண்டிருப்பவர்கள் "உனக்கு இதைப்பற்றி தெரியவில்லை என்றால் வாயையும் குண்டலினியையும் பொத்திக் கொண்டு சும்மா இருப்பது தானே" என்பார்கள். எனக்குத் தெரிந்த ஒரே ஆசனம் சவாசனம்.

நன்றி: குமுதம்

Wednesday, August 17, 2005

கண்கள் குளமாகும், மனம் வெதும்பும் !

Image hosted by Photobucket.com


உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய படம் இது !!!

1994-இல் சூடானில் பஞ்சம் தலைவிரித்தாடியபோது, கெவின் கார்ட்டர் என்பவர் எடுத்த, புலிட்ஸர் பரிசு வென்ற புகைப்படம் இது !!! இப்படம், கொடும்பசியால் பீடிக்கப்பட்ட ஒரு கறுப்பின பெண்குழந்தை, ஒரு கிலோமீட்டர் அப்பாலுள்ள ஒரு ஐக்கிய நாட்டு உணவு மையத்தை நோக்கி ஊர்ந்து செல்வதை சித்தரிக்கிறது.

படத்தில் காணப்படும் பிணந்தின்னிக் கழுகு குழந்தையின் சாவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது !!! படத்தை எடுத்தவுடன் கார்ட்டர் அவ்விடத்தை விட்டு சென்று விட்டதால், அக்குழந்தையின் கதி என்னவாயிற்று என்று யாருக்குமே தெரியாமல் போனது.

மூன்று மாதங்களுக்குப் பின் கெவின் கார்ட்டர் மனஅழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டார் !!!

The BOSS !

ஆதியில் மனித உடல் உருவாக்கப்பட்டபோது, உடலின் எல்லா அங்கங்களும் தாமே உடலின் தலைவராக (BOSS) இருக்க விரும்பின.

மூளை, "உடலின் அனைத்து இயக்கங்களையும் கட்டுப்படுத்துவதால், நானே பாஸ்!" என்றது. உடனே பாதங்கள், "நாங்கள் தான் அந்த மூளையையே சுமந்து, அது விரும்பும் இடத்துக்கு இட்டுச் செல்கிறோம். எனவே நாங்களே பாஸ்!" என்றன.

உடனே கைகள், "நாங்கள் வேலை செய்து பணம் ஈட்டுவதால், எங்களுக்கே பாஸ் ஆவதற்குரிய தகுதி உள்ளது!" என்று கூறின. அதைத் தொடர்ந்து, இதயம், நுரையீரல், கண்கள் என்று பல அங்கங்களும், தாங்களே பாஸ் ஆவதற்குரிய தகுதி உடையவை என்று கூற, சச்சரவு வலுத்தது.

இறுதியாக, ஆசனவாயில் (ஆ.வா), " ஏன், நான் பாஸ் ஆகக் கூடாதா?" என்றவுடன் மற்ற அங்கங்கள் இடிஇடியென சிரித்து, அதை ஏளனம் செய்தன !!! கடுப்பான ஆ.வா தன்னை இறுக மூடிக்கொண்டு வேலை நிறுத்தத்தில் இறங்கியது !

ஒரு சில நாட்களில், அதன் விளைவாக, கண்கள் பாரமாகி, கைகால்கள் தடுமாறி, இதயமும், நுரையீரலும், மூளையும் பாதிக்கப்பட்டு, உடல் பெரும் அவதிக்கு உள்ளானது. முடிவில், மற்ற அங்கங்கள் ஆலோசனை செய்து, ஆ.வா வுக்கு பாஸ் பதவியை தந்து விட இசைந்தன.

அன்றிலிருந்து, மற்ற அங்கங்கள் தங்களுக்குரிய பணியை சரிவர இடைவிடாமல் செய்ய, தலைவராகிய பாஸ் (என்பவர்!) ஓரிடத்தில் அமர்ந்தபடி, கழிவை வெளியேற்றுவதை மட்டும் செய்து வருகிறார் !!!

Sunday, August 14, 2005

நினைவெல்லாம் நித்யா! --- A SHORT story

குமுதத்தில் ஏதோ ஒரு வாரம் சினிமா தலைப்புக்களை வைத்து ஒரு பக்கக் கதைகள் பிரசுரம் செய்யப்பட்டிருந்தன. அந்த உந்துதலில், அதே பாணியில், எனது ஒரு கதை(!) முயற்சி தங்கள் பார்வைக்கு !!! படித்து விட்டு அடிக்க வர மாட்டீர்கள் என்று ஒரு நம்பிக்கை தான் :-)
****************************************************
ஆத்மா நித்யாவின் திருமணத்திற்கு செல்ல ஆயத்தமானான். ஏனோ மனதை சோகம் கவ்வியது, தனிமையுணர்வு அவனை வதைத்தது ! சில வருடங்களாக பத்திரப்படுத்தியிருந்த கடிதங்களை கொண்டு செல்வதற்கு தயாராக வைத்திருந்தான். நித்யாவும் அவனும் சம்மந்தப்பட்டதையும், அக்கடிதங்கள் குறித்தும், யாரிடமும் சொல்வதில்லை என்று சமீபத்தில் அவளிடம் சத்தியம் செய்தது அவன் நினைவில் நிழலாடியது ! என்ன செய்வது ? 'மீறவேண்டிய கட்டாயம்' என்று நினைத்துக் கொண்டான்,

நித்யா அன்போடு வாங்கித் தந்த சந்தன நிறச் சட்டையை அணிந்து கொண்டான். அவனது ஒரு பிறந்த நாளுக்கு நித்யா வாங்கித் தந்த, இதுவரை அவன் அணிந்திராமல் வைத்திருந்த, கைக்கடிகாரத்தை கட்டிக் கொண்டான். ஒரு கோர விபத்தில் தன் தாய் தந்தையரை இழந்து, தற்கொலை வரை சென்ற அவனை மீட்டு, ஆறுதல் கூறி, மெல்லத் தேற்றி, தன்னுடன் இணைத்துக் கொண்ட நித்யாவின் உயர்ந்த குணம் யாருக்கு வரும் ? தான் வாழும் இந்த வாழ்க்கையே அவள் மீட்டுத் தந்தது தானே என்ற ஓர் எண்ணம் எழுந்து, தான் செய்யவிருக்கும் செயல் சரியானதா என்று மனதில் எழுந்த கேள்விக்கு பதிலளிக்க அவன் அப்போது தயாராக இல்லை !

திருமண மண்டபத்தில் ஜேஜே என்று கூட்டம் ! நித்யாவின் நலம் விரும்பிகள் தான் எத்தனை பேர் என்று எண்ணிக் கொண்டான். மணமேடையில் ஒரு தேவதை போல் நித்யா வீற்றிருந்தாள். 'என்ன ஒரு அற்புதமாக ஜோடிப் பொருத்தம்!' என்று ஆத்மா மலைத்துப் போனான். உடனே, தான் செய்ய இருப்பது சரி தானா என்ற தயக்கம் ஏற்பட்டது. அவனைப் பார்த்தவுடன், நித்யா, உணர்வை வெளிக்காட்டாமல், "உன்னை எதிர்பார்த்தேன், ஆத்மா ! பிரகாஷ¤க்கு உன்னை அறிமுகப்படுத்த வேண்டும், வா, வா" என்றாள்.

ஆத்மா நிதானமாக தான் எடுத்து வந்த கடிதக்கட்டை புது மாப்பிள்ளையின் கையில் அழுத்தி, "இது தான் நான் உங்களுக்கு தரும் மிகச் சிறந்த திருமணப்பரிசு !!!" என்றவுடன், நித்யா அவனை மிகுந்த சங்கடத்துடனும் குழப்பத்துடனும், கொஞ்சம் கோபத்துடன் நோக்குவதை பொருட்படுத்தாமல், "பிரகாஷ், நித்யா பல வருடங்களாக சேவை செய்து வரும் மதியிறுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நலம் பேணும் மையத்தில், அவளது அன்பும், அரவணைப்பும், உந்துதலும் தந்த நம்பிக்கையில், தங்கள் வாழ்க்கை மெல்லத் துளிர்வதை உணரத் துவங்கியுள்ள பிஞ்சு ஜீவன்கள் நித்யாவுக்கு, பல சமயங்களில், தங்கள் கைப்பட எழுதியும் வரைந்தும் தந்த அன்பைச் சுமக்கும் கடிதங்கள் தான் இவை ! பாரதி கண்ட புதுமைப் பெண்ணை மனையாளாகப் பெற்றதற்கு என் வாழ்த்துக்கள்" என்றான் !!!!!

பின் நித்யாவைப் பார்த்து, "என்னை மன்னித்து விடு, நித்யா! உன் நல்ல நண்பனான என்னால் இவ்விஷயத்தை உன் வாழ்க்கைத் துணையாக வருபவரிடம் சொல்லாமல் இருக்க முடியலை" என்று கூறி புன்னகைத்தான் !!!
****************************************************
என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, August 13, 2005

உதவிய நண்பர்களுக்கு நன்றி !

எனது பிரமிக்க வைக்கும் கௌசல்யா பதிவை படித்ததன் தொடர்ச்சியாக சில வலைப்பதிவு நண்பர்கள் தங்களால் ஆன பண உதவி செய்ய முன் வந்துள்ளனர். உங்களில் பலர் இந்த எனது பதிவை தவற விட்டிருக்கலாம். அதனாலேயே, இந்த வேண்டுகோளை மீண்டும் உங்கள் முன் வைக்கிறேன். ஒரு கணிசமான தொகை திரட்டியவுடன், அதை சென்னையில் உள்ள ஒரு பிரபல வலைப்பதிவர் ஒருவர் மூலம் கௌசல்யாவிடம் (அவருக்கு பயன் தரும் வகையில்) சேர்ப்பித்து விட ஆவன செய்கிறேன்.

இது வரை, பணம் அனுப்பிய திருமதி ஜெயஸ்ரீ(USA), திருமதி ரம்யா நாகேஷ்வரன், குழலி, திரு.டோண்டு ராகவன், எஸ்.சங்கர்(தில்லி), திருமலை ஆகியோருக்கு என் நன்றிகள். இதில் ஒத்துழைப்பு தரும் ராம்கி அவர்களுக்கும் நன்றி.

என்றென்றும் அன்புடன்
பாலா

Sunday, August 07, 2005

1981 - A Love Story!

********************************************
இம்மாதிரி தலைப்பைப் பார்த்தவுடன், "கெளம்பிட்டாங்கய்யா, கெளம்பிட்டாங்கய்யா" என்று நினைத்தபடி, இப்பதிவுக்கு வருகை தந்த உங்களை நான் ஏமாற்றவே மாட்டேன் ! ஏனெனில், இது உண்மையாகவே ஒரு காதல் கதை சம்மந்தப்பட்டது தான் !!!

கொஞ்ச நாட்கள் முன், எங்கள் வீட்டுப்பரணை சுத்தம் செய்ய வேண்டி சில பழைய பெட்டி/டப்பாக்களை கீழே இறக்கி குடைந்து கொண்டிருந்தபோது, நான் முன்னொரு காலத்தில் (24 ஆண்டுகளுக்கு முன்!!!) எழுதிய சிறுகதை(யா?) ஒன்று தட்டுப்பட்டது. உடனே உங்கள் ஞாபகம்(!) தான் வந்தது! (வசமாக மாட்டினீர்களா ?). அக்கதை எழுதப்பட்டிருந்த மக்கிப் போயிருந்த காகிதங்களை ஸ்கேன் செய்து, உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்! என் கதை எழுதும் திறமையை வளர்த்துக் கொள்வதை விடுத்து, நான் பொறியியல் படிக்கச் சென்று விட்டது உங்கள் துரதிருஷ்டமே ;-)


ஒரு சின்ன பிரச்சினை! பழைய காகிதங்கள் என்பதால், கதையைப் படிக்க நீங்கள் சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். இன்னுமொரு பிரச்சினை (அதானே!). கதையின் முக்கியக் கட்டத்தில் (Turning Point!) எழுத்துக்கள் அழிந்து போயுள்ளன!!! இதுவும் உங்கள் துரதிருஷ்டமே ;-)

இருந்தாலும், 'என்ன எழுதியிருப்பேன்?' என்று என் பழைய ஞாபகங்களை கடுமையாக(!) அலசிக் கொண்டிருக்கிறேன் ! ஞாபகம் வந்தால் (வரும்!) 'யுரேகா!' என்று கூவியபடி வந்து பதித்து விடுகிறேன்! அதற்குள் உங்களுக்கு அது குறித்து ஏதாவது தோன்றினால், சொல்லுங்களேன். ஆனால், அதற்காக (அதாவது, சிறந்த கற்பனைக்காக!) "பாதி ராஜ்யம் தந்து, என் பெண்ணையும் கொடுப்பேன்" என்றெல்லாம் சொல்ல நான் ஒன்றும் சுஜாதா(!) கிடையாது! அதிகபட்சமாக, டிரைவ்-இன்னில் போண்டா, காபி வாங்கித் தர இயலும் !!! இனி, 1981 - A LOVE STORY .....
***************************************************









***************************************************

ரவியின் அப்பாவுக்கு ரவியின் காதல் விஷயம் எப்படித் தெரிந்திருக்கும் என்று யாராவது யோசித்துக் கூறுங்களேன், Please !!!!!

என்றென்றும் அன்புடன்
பாலா

Friday, August 05, 2005

Two Images

ஆஹா !!!




ஐயோ !!!

சிந்திப்பதற்கு சில! - 1

1. முதலில் உன்னை புறக்கணிப்பார்கள், பின் உன்னை எள்ளி நகைப்பார்கள், பின் உன்னிடம் சண்டையிடுவார்கள், பின் நீ வெல்வாய் !!!
---- யாரோ

2. வாழ்க்கையை பின் நோக்கித் தான் புரிந்து கொள்ள முடியும், ஆனால் அதை முன் நோக்கியே வாழ வேண்டும் !!
--- யாரோ

3. நம்மில் வெளியே கடவுளை காண்பது சாத்தியமில்லை. நம் ஆன்மாக்களே, புறத்தில் காணப்படும் கடவுள்தன்மைக்கு ஊற்றாக விளங்குகின்றன. நாமே தலைசிறந்த கோயில் !!! அதன் திருவுருவப்படுத்துதல் என்பது நம் அகத்தில் நாம் காண்பதின் ஒரு மிக மெல்லிய நகலே !!!
--- சுவாமி விவேகானந்தர்

4. உங்களுக்கு புலப்படும் மொத்த ஒளியின் விளிம்பில் நின்று, அறிந்திராக் கருவெளியில் நீங்கள் அடியெடுத்து வைக்கத் தலைப்படும் நேரம், திடமான தரை முன் இருக்கிறது (அல்லது) பறக்க கற்றுத் தரப்படுவோம் என்று அறிவதே நம்பிக்கை எனப்படுவதாம்.
--- பார்பரா வின்டர்

5. நாம் செய்ய அச்சப்படும் விஷயங்களை செயல்படுத்துவதை, வாழ்நாள் முழுதும், ஒரு பழக்கமாக மேற்கொள்வதே வெற்றியின் திறவுகோல் !!!
--- டிரேசி

6. கல்வி என்பது போற்றுதலுக்குரியதே. அதே நேரத்தில், தெரிந்து கொள்ள அவசியமான விஷயங்களை கற்றுத்தர இயலாது என்பதை அவ்வப்பொழுது நினைவு கூர்வதும் மிக அவசியமே !!
--- ஆஸ்கார் வைல்ட்

7. இறுதியில் கணக்கில் கொள்ளப்படுபவை, உங்கள் வாழ்வின் வருடங்கள் அல்ல, வருடங்களில் நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையே!!! --- ஆப்ரஹாம் லின்கன்

8. நமக்கு முன் இருப்பதும் பின் இருப்பதும் மிக மிகச் சிறியவை, நம்முள் இருப்பதைக் காட்டிலும் !!! --- எமெர்ஸன்

9. மக்கள் மலைகளின் உயரங்களையும், கடலின் பேரலைகளையும், நதிகளின் நீண்ட பாதைகளையும், நட்சத்திரங்களின் விநோத நகர்வுகளையும் கண்டு அதிசயிக்க அதிக தூரம் கடக்கிறார்கள். ஆனால், அதிசயிக்காமலேயே தங்களை கடந்து விடுகிறார்கள்!!!
--- அகஸ்டின்

10. மனப்பிறழ்வு என்பது, ஒரே காரியத்தை ஒரே மாதிரி செய்து, அதற்கு வித்தியாசமான முடிவுகளை எதிர்பார்ப்பதே !!!
--- ஐன்ஸ்டைன்

11. ஒரு விடயம் குறித்த உணர்வுகளும், அது குறித்த புரிதலும் ஒன்றுக்கொன்று எதிர்மறையானவை !!!
--- ரஸ்ஸல்

Wednesday, August 03, 2005

பிரமிக்க வைக்கும் கௌசல்யா !

சமீபத்தில் பத்திரிகைகளில் வந்த, கௌசல்யா என்ற மாணவியைப் பற்றிய செய்தியை பலரும் படித்திருக்கலாம். இவ்விளம்பெண்ணின் சிறந்த கல்வியார்வமும், அயரா உழைப்பும், சாதிக்க வேண்டும் என்ற மனவுறுதியும், தன்னடக்கமும், யாரையும் பிரமிப்பில் ஆழ்த்தி விடும். கௌசல்யா, சிறுவயதிலேயே பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்டு, அந்தியூர் கிராமத்தில் ஒரு ஹோட்டலில் கூலி வேலை செய்து வரும், அவரது தாய்வழிப் பாட்டனாரால் வளர்க்கப்பட்டவர். வாழ்க்கையில் பல கஷ்டங்களை சமாளித்து, போராடி, 'மருத்துராக வேண்டும்' என்ற ஒரே குறிக்கோளோடு படித்தவர் !

கௌசல்யா, அந்தியூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படித்து, பத்தாவது மற்றும் பன்னிரெண்டாவது வகுப்பு பொதுத் தேர்வுகளில் முறையே 475/500 மற்றும் 1149/1200 என்று மதிப்பெண்கள் பெற்று, பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார் ! கௌசல்யா, இயற்பியலில் 199 மதிப்பெண்களும், வேதியல் மற்றும் உயிரியல் பாடங்களில் தலா 200 மதிப்பெண்களும், பொது நிழைவுத்தேர்வில் 98.33 மதிப்பெண்களும் பெற்றார் என்ற தகவல், கேட்பவரை வியப்பின் உச்சத்துக்கு இட்டுச் செல்லும் !!!

இவருக்கு, பெருமை வாய்ந்த, சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும், 'இளமையில் வறுமை' எனும் கொடுநோய் பெரும் தடைக்கல்லாக குறுக்கிட்டது. தனது அயரா உழைப்பு தந்த வெற்றியை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டிய தருணத்தில், கல்லூரிக்கு கட்ட வேண்டிய தொகை வேண்டி (ஏன், அந்தியூரிலிருந்து சென்னை செல்ல இரயில் கட்டணம் கூட கையில் இல்லாத நிலைமையில்!) பல இடங்களில் பணவுதவு கேட்டு அலைய வேண்டிய அவலநிலை இம்மாணவிக்கு ஏற்பட்டது பெரிய கொடுமை தான் !!!

கௌசல்யாவின் நல்ல நேரம், அந்தியூருக்கு வருகை தந்திருந்த மாநில மனித உரிமைக் கழக உறுப்பினர் திரு.சம்மந்தம் வாயிலாக, இம்மாணவியின் பரிதாப நிலைமை ஊடக வெளிச்சத்திற்கு வந்தது. நமது முதலமைச்சர் கௌசல்யாவை அழைத்து, கல்லூரிக்கான முதலாண்டு கட்டணத்திற்கும், புத்தகங்கள் வாங்கவும் பணவுதவி செய்தார். அதைத் தொடர்ந்து, மேலும் பல நல்ல உள்ளங்கள் தங்களால் இயன்ற உதவியை செய்ய முன் வந்தனர்.

கௌசல்யா, ஆகஸ்ட் 1-ஆம் தேதி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மாணவியாகச் சேர்ந்து, தனது குறிக்கோளின் முதல் இலக்கை வெற்றிகரமாக அடைந்து விட்டர் !!! கௌசல்யாவின் முகத்தில் இப்போது தான் புன்னகையை பார்க்க முடிகிறது !!! இதே போல். பல கௌசல்யாக்களுக்கு, அவர்கள் தொலைத்த புன்னகையை மீட்டுத் தர வேண்டிய கடமை, நம் சமூகத்தின் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது !!!

நம் தமிழ் வலைப்பதிவர்கள் சார்பாக, ஒரு உதவித்தொகையை திரட்டி, இம்மாணவியின் படிப்புச் செலவுக்கு வழங்கலாம் என்பது என் எண்ணம். நூறு பேர் தலா 500/- தந்தாலே, மொத்தம் 50,000/- திரட்டி விடலாம். உரியவரிடம் தொகையை சேர்ப்பிப்பது மற்றும் அத்தொகை அம்மாணவிக்கு நல்ல வகையில் பயன் தருமாறு செய்வதும் குறித்து பின்னர் முடிவு செய்யலாம்.

என்றென்றும் அன்புடன்
பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails